செய்திகள்
அமித் ஷா

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் இந்தியா வளர்ந்த நாடாக முடியாது.. -அமித் ஷா

Published On 2019-08-26 04:45 GMT   |   Update On 2019-08-26 04:45 GMT
இந்தியா வளர்ந்த நாடாக மாற, சில பிரச்சனைகளுக்கு உள்நாட்டில் தீர்வு காண வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறியுள்ளார்.
ஐதராபாத்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு, அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது சர்தார் வல்லபாய் பட்டேலின் கனவை நனவாக்கும் செயல் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீரை முழுமையாக இணைக்கவே, சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறியுள்ளார்.

இது குறித்து தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு காஷ்மீரை பாராளுமன்றம் அங்கீகரித்துவிட்டது.



630 சமஸ்தானங்கள் கொண்ட இந்தியாவை முதல் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் பட்டேல் ஒருங்கிணைத்தார். அன்று ஜம்மு காஷ்மீர் விடுபட்டுபோனது. இப்போது அந்த குறை நீக்கப்பட்டுவிட்டது.

போதை பொருள் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் சைபர் கிரைம் உள்ளிட்ட பிரச்சனைகளால் இந்தியா திணறி வருகிறது. இந்த பிரச்சனைகளுக்கு உள்நாட்டில் தீர்வு காணாமல் இந்தியா, ஒரு வளர்ந்த நாடாக உருவெடுக்கவே முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags:    

Similar News