செய்திகள்
அருண் ஜெட்லி

சிறந்த நாடாளுமன்றவாதி... திறமையான வக்கீல்... பன்முகத் தன்மை கொண்ட தலைவர் ஜெட்லி

Published On 2019-08-24 08:13 GMT   |   Update On 2019-08-24 08:13 GMT
பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி தனது 66-வது வயதில் காலமானார்.அவரைப் பற்றிய குறிப்பை பார்ப்போம்.
புதுடெல்லி:


டெல்லியில் பஞ்சாபி இந்து பிராமணக் குடும்பத்தில், வழக்கறிஞர் மகராஜ் கிஷன் ஜெட்லிக்கும் ரத்தன் பிரபா ஜெட்லிக்கும் 1952ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி பிறந்தவர் அருண் ஜெட்லி.

தமது பள்ளிக் கல்வியை டெல்லியின் புனித சேவியர் பள்ளியில் 1957 முதல் 69 வரை பயின்றார். அதன்பின்னர் பொருளியல் இளங்கலைப் பட்டத்தை ஸ்ரீராம் பொருளியல் கல்லூரியில் 1973 இல் பெற்றார். 1997இல் சட்டப்படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் முடித்தார்.

மாணவப் பருவத்தில் கல்வித்திறன் மற்றும் பிற கல்விசாரா செயற்பாடுகளுக்காக பாராட்டுக்கள் பெற்றுள்ளார். 1974இல் டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தலைவராக இருந்துள்ளார். சட்டம் முடித்தபின் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார். டெல்லி உள்ளிட்ட உயர்நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்றிய அவர், பாஜகவில் இணைந்து அரசியல் பயணத்தையும் தொடங்கினார்.

1975ல் இந்திரா காந்தி அரசுக்கு எதிராக அவசர நிலை காலத்தில் தீவிரமாக செயல்பட்டார். அப்போது அவர் யுவ மோர்ச்சாவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அவர் கைது செய்யப்பட்டு அம்பாலா சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 19 மாதங்கள அவர்  சிறைவாசம் அனுபவித்தார்.

கட்சி மேலிடத்தின் மிகுந்த நம்பிக்கையை பெற்ற அருண் ஜெட்லிக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. பாஜக சார்பில் தொடர்ந்து மாநிலங்களைவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



மத்திய பாஜக அமைச்சரவையில் நிதித்துறை, கம்பெனி விவகாரங்கள் துறை, பாதுகாப்புத்துறை, சட்டம் மற்றும் நீதித்துறை உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

மோடி அமைச்சரவையில் நிதித்துறை மந்திரியாக இருந்தபோது, ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு வரி சீர்திருத்த நடவடிக்கையை மேற்கொண்டார். அந்நிய நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். லோக்பால் சட்டம் உள்ளிட்ட முக்கிய சட்டங்களை நிறைவேற்றுவதில் முக்கிய பங்காற்றினார்.

அருண் ஜெட்லி 1982ம் ஆண்டு மே 24ம் தேதி சங்கீதாவைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ரோகன் என்ற மகனும், சோனாலி என்ற மகளும் உள்ளனர்.

சிறந்த நாடாளுமன்றவாதி, வழக்கறிஞர், அரசியல் தலைவர் என பன்முகத் தன்மை கொண்ட அருண் ஜெட்லி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. அரசியலில் இருந்தும் ஒதுங்கியே இருந்தார்.

சமீப காலமாக அவர் பொதுவெளியில் எங்கும் செல்ல முடியாத அளவுக்கு உடல்நிலை மோசமடைந்தது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மதியம் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News