செய்திகள்
மெக்டொனால்டு

சொமாட்டோவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய மெக்டொனால்டு

Published On 2019-08-24 06:17 GMT   |   Update On 2019-08-24 06:42 GMT
இறைச்சி தர சான்றிதழ் தொடர்பாக பிரபல உணவு நிறுவனமான மெக்டொனால்டு வெளியிட்ட தகவல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி:

இறைச்சிக்காக விலங்குகளை வெட்டுவதில் உள்ள நடைமுறைகளை வைத்து ஹலால், ஜட்கா என வகைப்படுத்தப்படுகிறது. ஹலால் என்பது இஸ்லாமிய முறைப்படி வெட்டப்படும் ஆட்டுக்கறி, கோழிக்கறி ஆகியவற்றை குறிக்கிறது. ஜட்கா என்பது இந்து முறைப்படி வெட்டப்படும் ஆட்டுக்கறி, கோழிக்கறி ஆகியவற்றை குறிக்கிறது.

ஆடுகளும் கோழிகளும் ஒரே வீச்சில் கழுத்து துண்டாக்கப்பட்டு கொல்லப்படுவதை ஜட்கா எனலாம். ஆனால், இஸ்லாமிய ஹலால் முறையில், விலங்குகளின் கழுத்து கத்தியால் கீறப்பட்டு அதன் ரத்தம் வடிக்கப்படுகிறது. பின்னர் அந்த விலங்கு இறந்ததும் அதன் இறைச்சி வெட்டி எடுக்கப்படுகிறது.



இந்நிலையில் பிரபல உணவு விநியோக நிறுவனமான சொமாட்டோ நிறுவனம், சப்ளை செய்த அசைவ உணவுகளில் ‘ஹலால்’ என குறியிட்டு பாகுபாடு காட்டுவதாக சமீபத்தில் சிலர் டுவிட்டரில் கருத்து தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் அந்த நிறுவன செயலியில் இருந்து வெளியேறினர்.

அதேபோன்று இப்போது பிரபல நிறுவனமான மெக்டொனால்டு உணவகமும் சர்ச்சையில் சிக்கி உள்ளது. மெக்டொனால்டு நிறுவனத்தின் டுவிட்டரில் ஒரு பயனர் கேள்வி எழுப்பியிருந்தார். அதில், உங்கள் ஓட்டல்கள் எல்லாம் ஹலால் சான்று பெற்றவையா? என கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த மெக்டொனால்டு, வாடிக்கையாளர்களுக்கு ஹலால் இறைச்சியையே பரிமாறுவதாக கூறியிருந்தது.

“எங்கள் உணவகங்களில் நாங்கள் பயன்படுத்தும் இறைச்சி மிக உயர்ந்த தரம் வாய்ந்தது. மேலும் HACCP சான்றளிக்கப்பட்ட அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சப்ளையர்களிடமிருந்து இறைச்சி பெறப்படுகிறது. எங்கள் உணவகங்களில் ஹலால் சான்றிதழ்கள் உள்ளன. எங்களின் எந்த உணவகத்திற்கு சென்றாலும் அந்த உணவக மேலாளர்களிடம் சான்றிதழை காட்டும்படி  நீங்கள் கேட்கலாம்” என மெக்டொனால்டு கூறியிருந்தது.

மெக்டொனால்டு நிறுவனத்தின் இந்த பதிவு டுவிட்டரில் வேகமாக பரவியது. பலர் தங்கள் அதிருப்தியையும், கண்டனத்தையும் பதிவு செய்தனர். சிலர் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான யோசனையை கூறி உள்ளனர்.

“மெக்டொனால்டு நிறுவனமே, இந்துக்களாகிய நாங்கள் ஜட்கா உணவை விரும்புகிறோம்” என ஒருவர் கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.

“தேவையில்லாமல் நான் ஹலால் இறைச்சியை சாப்பிட விரும்பவில்லை. எனக்கான விருப்பத் தேர்வு இருக்கிறதா? அல்லது நான் மெக்டொனால்டு உணவகத்தில் சாப்பிட வேண்டாமா?” என மற்றொருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த விவகாரம் இணையத்தில் விவாதப் பொருள் ஆகியிருப்பதால், மெக்டொனால்டு நிறுவனத்திற்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த விவகாரத்திற்கு என்ன தீர்வு காணலாம் என்பது குறித்து யோசனை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News