செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிராக வழக்கு - மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2019-08-23 18:49 GMT   |   Update On 2019-08-23 18:49 GMT
முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

முத்தலாக் தடை சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் இஸ்லாமிய பெண்களை தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் ஆகியவை வழங்க முடியும்.

முத்தலாக் தடை சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததால், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து முத்தலாக் தடை சட்டத்தை ரத்து செய்யக்கோரி சமஸ்த கேரளா ஜமியத்துல் உலமா, சய்யத் பரூக், ஜமியத் உலமாஏஹிந்த் உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளன.

இந்த மனுக்கள் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் என்.வி.ரமணா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் சல்மான் குர்ஷித் ஆஜராகி வாதாடினார். அப்போது நீதிபதிகள், சதி, வரதட்சணை, குழந்தை திருமணம் ஆகியவற்றை குற்றம் என்று அறிவித்துள்ள நிலையில் முத்தலாக் முறைக்கு எதிராக ஏன் சட்டம் கூடாது? இதை ஒரு சந்தேகமாகத்தான் கேட்கிறோம் என்றனர்.

இதற்கு பதிலளித்த சல்மான் குர்ஷித், முத்தலாக் தடை சட்டத்தில் கணவரை சிறைக்கு அனுப்புவதால் மனைவி பாதிக்கப்படுகிறார். மேலும் அரசியல் சட்டப்பிரிவில் 14, 15, 21 ஆகியவற்றில் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது என்று கூறினார்.

இதையடுத்து இந்த மனுக்களுக்கு மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர். 
Tags:    

Similar News