செய்திகள்
பிரதமர் மோடி

5 நாள் பயணம்: பிரதமர் மோடி பிரான்ஸ் புறப்பட்டார்

Published On 2019-08-23 02:11 GMT   |   Update On 2019-08-23 02:11 GMT
பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு புறப்பட்டு சென்றார்.
புதுடெல்லி :

பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று அவர் பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு புறப்பட்டார். அங்கு அவர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் எடோவர்ட் பிலிப் ஆகியோருடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த 2 விமான விபத்துகளில் உயிரிழந்த இந்தியர்களின் நினைவாக பாரீசில் நிறுவப்பட்டு உள்ள நினைவுச்சின்னம் ஒன்றை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அத்துடன் பிரான்சில் வாழும் இந்தியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றிலும் பிரதமர் பங்கேற்கிறார்.

பின்னர் பாரீசில் இருந்து இன்று புறப்பட்டு அமீரகம் செல்கிறார். அங்கு பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயாத் அல் நஹ்யானுடன் இருதரப்பு, பிராந்தியம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது அவருக்கு அமீரகத்தின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் சயாத்’ விருது வழங்கப்படுகிறது.

இந்த பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து நாளை பஹ்ரைன் புறப்படுகிறார். அங்கு பஹ்ரைன் பட்டத்து இளவரசரும், பிரதமருமான ஷேக் கலிபா பின் சல்மான் அல் கலிபா மற்றும் மன்னர் ஷேக் ஹமத் பின் இசா அல் கலிபா ஆகியோரை சந்தித்து பேசும் மோடி, பின்னர் மனாமாவில் புனரமைக்கப்பட்டு உள்ள கிருஷ்ணர் கோவிலையும் திறந்து வைக்கிறார். பஹ்ரைனுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார்.

இந்த பயணங்களை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 25-ந்தேதி மீண்டும் பிரான்ஸ் செல்கிறார். அங்கு பியாரிட்ஸ் நகரில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் அவர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகிறார். 26-ந்தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டுக்கு இடையே அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேசவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த பயணத்தால் மேற்படி நாடுகளுடனான உறவு மேலும் வலுப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பாரீஸ் புறப்படும்முன் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியா-பிரான்ஸ் இடையே மிகச்சிறந்த உறவு நிலவுகிறது. நீண்ட கால மற்றும் மதிப்பு மிக்க இந்த நட்புறவு பரஸ்பர வளம், அமைதி மற்றும் வளர்ச்சியுடன் மேலும் வலுப்பெற இந்த பயணம் உதவும்.

இந்தியாவின் 3-வது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாகவும், இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்திலும் அமீரகம் உள்ளது. அந்த நாட்டுடன் அடிக்கடி மேற்கொள்ளும் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நமது துடிப்பான உறவுகளுக்கு சாட்சியாக விளங்குகிறது.

எனது இந்த பயணத்தின் போது அமீரகத்தின் மிக உயரிய விருது எனக்கு அளிக்கப்படுகிறது. மேலும் வெளிநாடுகளில் பணமில்லா பரிவர்த்தனையை விரிவுபடுத்தும் வகையில் ‘ரூபே’ அட்டையை முறைப்படி அமீரகத்தில் தொடங்கி வைக்கிறேன்.

பஹ்ரைன் பிரதமரும், பட்டத்து இளவரசருமான ஷேக் கலிபா பின் சல்மான் அல் கலிபாவுடனான பேச்சுவார்த்தையை நான் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளேன். இதன் மூலம் நமது இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய, சர்வதேச பிரச்சினைகளில் பரஸ்பர நலன்கள் குறித்த இருதரப்பு பார்வைகளும் பகிரப்படும்.

அங்கு வசிக்கும் இந்தியர் களுடன் கலந்துரையாடுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. மனாமாவில் புனரமைக்கப்பட்டு உள்ள கிருஷ்ணர் கோவிலை திறந்து வைப்பதன் மூலம் புகழ்மிக்க இந்த கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை காலத்தில் ஆசிர்வதிக்கப்பட்டவனாக இருப்பேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியிருந்தார். 
Tags:    

Similar News