செய்திகள்
காஷ்மீர்

காஷ்மீரில் தொடரும் கட்டுப்பாடுகள் - ஏராளமான திருமணங்கள் ரத்து

Published On 2019-08-22 23:18 GMT   |   Update On 2019-08-22 23:18 GMT
காஷ்மீரில் தொடரும் கட்டுப்பாடுகளால் ஏராளமான திருமணங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
ஸ்ரீநகர்:

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரண்டாக பிரிக்கப்படுகிறது. இதனால் அங்கு கடந்த சில வாரங்களாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகின்றன.

ஜம்முவில் மெல்ல மெல்ல சுமுக நிலை திரும்பி வருகிறபோதும், காஷ்மீரில் தொடர்ந்து அமைதியின்மை நீடிக்கிறது. எனவே அங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கின்றன. பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டே உள்ளன.

காஷ்மீரில் தற்போது பாரம்பரிய திருமண காலம் ஆகும். ஆனால் அங்கு அமலில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகளால் திருமணங்கள் பெரும்பாலும் ரத்து செய்யப்படுகின்றன. கடந்த 2 வாரங்களில் மட்டும் ஏராளமான திருமணங்கள் இப்படி ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது. திருமணங்கள் ரத்து செய்யப்படுவதால் இறைச்சி வியாபாரிகள், சமையல்காரர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் என ஏராளமானோர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இந்த திருமண காலத்தில் நடைபெறும் பல வியாபாரங்கள் பாதிப்படைந்து லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக உள்ளூர் வியாபாரிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர். இதற்கிடையில் கட்டுப்பாடுகள் காரணமாக காஷ்மீரில் ஊடக சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது.

அதே சமயம் ஸ்ரீநகர் உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் முழுவதும் அமைதியான சூழல் நிலவுவதாகவும், எந்த ஒரு பகுதியிலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்ததாக தகவல்கள் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.

மேலும் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை அதிகரித்து இருப்பதாகவும், அரசு அலுவலகங்களில் பணிக்கு வரும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடுகளால் அங்கு வசித்து வந்த வெளிமாநில தொழிலாளர் வெளியேறினர். அப்படி காஷ்மீரில் முடித்திருத்தும் தொழில் செய்து வந்த தொழிலாளர்கள் பலர் வெளியேறிவிட்டதால், உள்ளூர் தொழிலாளர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்து உள்ளது.

Tags:    

Similar News