செய்திகள்
இந்திராணி முகர்ஜி

சிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்

Published On 2019-08-22 10:14 GMT   |   Update On 2019-08-22 10:14 GMT
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைதாவதற்கு இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம் முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி:

கடந்த 2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தார். அப்போது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தை நடத்திய இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோர் தங்கள் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்தனர்.

ஆனால் நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் இது குறித்து அணுகிய போது அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து அப்போதைய நிதி மந்திரி ப.சிதம்பரத்தை, இந்திராணி முகர்ஜி அணுகியதால் ரூ.4 கோடியே 62 லட்சத்துக்கு பங்குகளை விற்க அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழை முறைகேடாக பெற்று தருவதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்தின் மூலம் பேரம் நடத்தியதாகவும், அதற்காக பெரும் தொகை கமி‌ஷனாக பெறப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன உரிமையாளர்களான பீட்டர் முகர்ஜியும், இந்திராணி முகர்ஜியும் மற்றொரு கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீதான முறைகேடு வழக்கில் அப்ரூவராக மாற இந்திராணி சம்மதம் தெரிவித்தார்.

இதனால் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் சி.பி.ஐ.யிடம் வாக்கு மூலம் அளித்தார். அதில் ப.சிதம்பரத்தை டெல்லி நார்த் பிளாக்கில் வைத்து சந்தித்ததாகவும், அவர் தனது மகனை சந்தித்து பேசும்படி கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.


இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் வைத்து கார்த்தி சிதம்பரத்தை சந்தித்து பேசிய போது அவர் 10 லட்சம் டாலர் லஞ்சம் கேட்டதாகவும் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

மேலும் பணப்பரிமாற்றம் தொடர்பான ஆதாரங்களையும் அவர் கூறி உள்ளார்.

அவரது வாக்குமூலம் மூலம் முறைகேட்டை உறுதி செய்த அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்தனர். தொடர்ந்து நேற்று ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளனர். ஆனால் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜியை நான் சந்தித்து பேசவில்லை என கார்த்தி சிதம்பரம் மறுத்துள்ளார்.
Tags:    

Similar News