செய்திகள்
8 வழிச்சாலை (மாதிரி படம்)

சுற்றுச்சூழல் அனுமதியின்றி 8 வழிச்சாலை திட்டத்தை தொடங்க மாட்டோம்- மத்திய அரசு

Published On 2019-08-22 05:47 GMT   |   Update On 2019-08-22 05:47 GMT
சுற்றுச்சூழல் அனுமதியின்றி 8 வழிச்சாலை திட்டத்தை தொடங்க மாட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
புதுடெல்லி:

சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து மத்திய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. நிலத்தை எடுத்துக் கொள்ளாமல் சுற்றுச்சூழல் அனுமதி பெற முடியாது. இதனால் திட்டத்துக்கான நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை துறை முறையிட்டது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து எழுத்துப்பூர்வமாக மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 8 வழிச்சாலையின் சிறப்பு அம்சங்கள் என்ன, அதன் பலன்கள் என்ன என்பது தொடர்பான விவரங்கள் இடம்பெற்றிருந்தன. 



கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைக்கும் வரை எந்தவொரு கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள மாட்டோம் எனவும் மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் இவ்வழக்கின் இறுதி விசாரணை இன்று தொடங்கியது. அப்போது, 8 வழிச்சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற தாமதம் ஆனால் என்ன செய்வீர்கள்? என மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த மத்திய அரசு, சுற்றச்சூழல் அனுமதி இல்லாமல் 8 வழிச்சாலை அமைக்கப்பட மாட்டாது, அந்த திட்டத்தை தொடங்க மாட்டோம், என தெரிவித்தது.
Tags:    

Similar News