செய்திகள்
தேவேகவுடா

குமாரசாமி ஆட்சி கவிழ்ந்ததற்கு சித்தராமையாவே காரணம்- தேவேகவுடா குற்றச்சாட்டு

Published On 2019-08-21 14:24 GMT   |   Update On 2019-08-21 14:24 GMT
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்ததற்கு காங்கிரஸ் தலைவர் சித்தராமையாதான் காரணம் என்று தேவேகவுடா குற்றம் சாட்டியுள்ளார்.

பெங்களூரு:

முன்னாள் பிரதமரும், கர்நாடக முன்னாள் முதல்- மந்திரி குமாரசாமியின் தந்தையுமான தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்ததற்கு காங்கிரஸ் தலைவர் சித்தராமையாதான் காரணம்.

எடியூரப்பா முதல்- மந்திரியாக வேண்டும், தான் எதிர்க்கட்சி தலைவராக இருக்க வேண்டும் என்பது தான் சித்தராமையாவின் விருப்பமாக இருந்தது.

கர்நாடகாவில் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க கூடாது என்ற ஒரே காரணத்துக்காகத்தான் நாங்கள் ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவாக இருந்தது.

இது சம்பந்தமாக சோனியாகாந்தியோ, ராகுல்காந்தியோ சித்தராமையாவுடன் கலந்து ஆலோசிக்கவில்லை.

குமாரசாமியை முதல்- மந்திரியாக பார்க்க சித்தராமையாவுக்கு பிடிக்க வில்லை. குமாரசாமி பதவிக்கு வந்ததால் சித்தராமையா கடுமையான மனவேதனையுடனும், கோபத்துடனும் இருந்தார்.

கடந்த தேர்தலில் மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா தோற்கடிக்கப்பட்டார். எங்களால்தான் தோற்றதாக கருதிய அவர், ஜனதாதளம் கட்சியை அழிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தார்.

அவர் எங்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். இதன் காரணமாக 2004-ல் இருந்தே எங்கள் கட்சியை அழிக்க வேண்டும் என்பது தான் அவரது கொள்கையாக இருந்தது.

இதுபோன்று அவர் எடுத்த நடவடிக்கையால் 2013-ல் 130 இடங்களை பிடித்த காங்கிரஸ் 2018-ல் 79 இடங்களை பிடிக்கும் நிலைக்கு சென்றது.

ராகுல்காந்தியை சித்தராமையா தவறாக வழி நடத்தினார். ஹசனில் பிரசாரம் செய்த ராகுல்காந்தி எங்கள் கட்சியை பாரதீய ஜனதாவின் ‘பி’ அணி என்று கூறினார்.


இதனால் ஹசன் பகுதி பாரதீய ஜனதா பக்கம் சென்றது. இங்கு முதன் முதலாக பாரதீய ஜனதா 14 இடங்களில் வெற்றி பெற்றது.

இன்று ஹசன் மற்றும் மாண்டியா பகுதியில் பாரதீய ஜனதா காலூன்றி அச்சுறுத்தல் தருகிறது என்றால் அதற்கு சித்தராமையாதான் காரணம்.

கர்நாடகாவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் நாங்கள் காங்கிரசுடன் கூட்டணி வைப்போமா? இல்லையா? என்பதுபற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது.

ஏனென்றால், உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் எங்களுடன் பேசுவதற்கு தயாராக இல்லை. சித்தராமையா தனது செல்வாக்கை நிரூபித்து காட்ட வேண்டும் என்று விரும்புகிறார்.

ஒருவேளை சோனியா காந்தி இதில் தலையிட்டால் அது வேறு மாதிரி மாறலாம்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Tags:    

Similar News