செய்திகள்
உச்ச நீதிமன்றம்

ப.சிதம்பரத்திற்கு சிக்கல்- மேல்முறையீட்டு மனுவை உடனே விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு

Published On 2019-08-21 05:39 GMT   |   Update On 2019-08-21 05:39 GMT
முன்ஜாமீன் தொடர்பாக தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீது உடனே விசாரித்து உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மறுத்ததால் ப.சிதம்பரத்திற்கு சிக்கல் நீடிக்கிறது.
புதுடெல்லி:

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அவரது மனுவையும் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் ப.சிதம்பரம். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் விடுமுறைக்கால சிறப்பு மனுவை அவரது வழக்கறிஞர்கள்  தாக்கல் செய்துள்ளனர். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ப.சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், சல்மான் குர்ஷித், விவேக் தங்கா ஆகியோர் வாதாடினர். 



ப.சிதம்பரத்தை நேற்று கைது செய்வதற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முயற்சி செய்ததாக கபில் சிபல் குறிப்பிட்டார். மேலும், சிதம்பரத்தை கைது செய்வதற்கு உடனடியாக தடை விதித்து இடைக்கால ஜாமீன் வழங்கும்படி கேட்டுக்கொண்டார். 

ஆனால் இந்த வழக்கில் உடனடியாக உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதி ரமணா தெரிவித்தார். தலைமை நீதிபதி தான் முடிவு எடுப்பார் என கூறி, மனுவை தலைமை நீதிபதிக்கு அனுப்பினார். 

இதையடுத்து தலைமை நீதிபதி அமர்வில் ஆஜரான ப.சிதம்பரம் வழக்கறிஞர்கள், இந்த வழக்கை உடனே விசாரித்து இடைக்கால நிவாரணம் வழங்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால், உடனே விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வும் மறுத்துவிட்டது. இதனால் ப.சிதம்பரத்திற்கு சிக்கல் நீடிக்கிறது.
Tags:    

Similar News