செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

ஆதாரை இணைப்பது தொடர்பான ‘பேஸ்புக்’ வழக்கில் ஐகோர்ட்டுகளுக்கு நோட்டீஸ் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2019-08-21 01:21 GMT   |   Update On 2019-08-21 01:21 GMT
பேஸ்புக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான அனைத்து வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற கோரும் வழக்கில் ஐகோர்ட்டுகளுக்கும், சமூக வலைத்தளங்களுக்கும் சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.
புதுடெல்லி:

‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், “பேஸ்புக் சமூக வலைத்தளத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் சென்னை, மும்பை உள்ளிட்ட ஐகோர்ட்டுகளில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்குகள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட்டு மட்டுமே விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

பேஸ்புக் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி தனது வாதத்தில், “பேஸ்புக் கணக்குடன் ஆதார் இணைப்பது போன்ற விஷயங்கள் தனி மனிதரின் அந்தரங்கத்தில் குறுக்கிடும் செயலாகும். சுப்ரீம் கோர்ட்டில் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தனி மனிதனின் அந்தரங்கம் என்பது அவனது அடிப்படை உரிமை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இது அதுபோன்ற உரிமையில் குறுக்கிடும் செயலாகும்” என்று கூறினார்.



‘வாட்ஸ்அப்’ தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், “வாட்ஸ்அப் என்பது உலகம் தழுவிய ஒரு செயலியாகும். இதன் செயல்பாடு குறித்து ஐகோர்ட்டுகள் பிறப்பிக்கும் உத்தரவு உலக அளவில் அதன் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தும். எனவே, இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு எடுத்துக்கொண்டு விசாரிப்பதுதான் முறையாக இருக்கும்” என்று கூறினார்.

தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

இந்த விவகாரம் தொடர்பான பொதுநல மனு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் கடந்த 18 மாதங்களாக விசாரிக்கப்பட்டு வருகிறது. சில உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. எனவே, பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய நிறுவனங்கள் ஐகோர்ட்டின் சட்டவரம்பை ஏற்றுக் கொண்டுள்ளன.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதற்கு நீதிபதிகள், “தனிமனித அந்தரங்கம் தொடர்பான உரிமை மற்றும் ஆன்லைன் குற்றங்களை தடுக்கும் அரசின் கடமை என்ற இரண்டுக்கும் இடையில் எப்போதும் முரண்பாடுகள் தொடர்கின்றன. எனவே இவை இரண்டுக்கும் இடையில் சமமான தன்மையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது” என்று கூறினர். இது தொடர்பான வழக்குகள் நடைபெற்று வரும் ஐகோர்ட்டுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

வருகிற செப்டம்பர் 13-ந்தேதிக்குள் இந்த கோர்ட்டுகள் பதில் மனு தாக்கல் செய்யவும், மத்திய அரசு, மற்றும் கூகுள், டுவிட்டர், யூடியூப் ஆகிய சமூக வலைத்தளங்களும், செயலிகளின் நிர்வாகமும் இது தொடர்பான தங்கள் எதிர்வினையை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தனர்.

சென்னை ஐகோர்ட்டில் தற்போது நடைபெற்று வரும் இது தொடர்பான வழக்கு விசாரணை தொடரலாம் என்றும், ஆனால் அந்த வழக்கில் முக்கியமான உத்தரவுகள் எதையும் சென்னை ஐகோர்ட்டு தற்போதைக்கு பிறப்பிக்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
Tags:    

Similar News