செய்திகள்
எடியூரப்பா

கர்நாடக மந்திரிசபை இன்று விரிவாக்கம்- 17 பேர் மந்திரியாக பதவி ஏற்கிறார்கள்

Published On 2019-08-20 02:13 GMT   |   Update On 2019-08-20 03:26 GMT
கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் இன்று நடக்கிறது. இதில் சுயேச்சை உள்பட 17 எம்.எல்.ஏ.க்கள் மந்திரியாக பதவி ஏற்கிறார்கள். அவர்களுக்கு கவர்னர் வஜூபாய்வாலா பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்தது.

அக்கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது. குமாரசாமி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து கடந்த மாதம் (ஜூலை) 26-ந் தேதி கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

காஷ்மீர் விவகாரம், கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு போன்ற காரணங்களால் மந்திரிசபை விரிவாக்கம் தள்ளிப் போனது. இந்த நிலையில் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்க எடியூரப்பா கடந்த வாரம் டெல்லி சென்றார். அங்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து, மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதித்தனர்.

மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய அமித்ஷா அனுமதி வழங்கினார். முதல்கட்டமாக 17 பேரை மந்திரிசபையில் சேர்த்துக்கொள்ள அவர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் 20-ந் தேதி (இன்று) நடைபெறும் என்று எடியூரப்பா ஏற்கனவே அறிவித்தார். எடியூரப்பா பதவி ஏற்று 25 நாட்களுக்கு பிறகு மந்திரிசபை விரிவாக்கம் நடக்கிறது.

அதன்படி இன்று காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணிக்குள் கவர்னர் மாளிகையில் மந்திரிகள் பதவி ஏற்பு விழா நடக்கிறது. மந்திரிகளாக பதவி ஏற்பவர்களுக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இதில் முதல்-மந்திரி எடியூரப்பா, கர்நாடக அரசின் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் மற்றும் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-



கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் நாளை (அதாவது இன்று) காலை 10.30 மணியில் இருந்து காலை 11.30 மணிக்குள் கவர்னர் மாளிகையில் நடைபெறும். இதுபற்றி கவர்னருக்கு கடிதம் எழுதி மந்திரிகள் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தகவல் தெரிவித்துள்ளேன். அவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்குவது என்பது இன்று (நேற்று) மதியத்திற்குள் முடிவு செய்யப்படும். இதுபற்றி அமித்ஷா உள்பட கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

சுயேச்சை எம்.எல்.ஏ. நாகேஷ் உள்பட 17 பேருக்கு மந்திரிசபையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஜெகதீஷ் ஷெட்டர், ஆர்.அசோக், ஈசுவரப்பா, ஸ்ரீராமுலு, மாதுசாமி, சசிகலா ஜோலே, ராஜூ கவுடா, பசவராஜ் பொம்மை, சுரேஷ்குமார், நேரு ஓலேகர், சோமண்ணா, கோவிந்த் கார்ஜோள், டாக்டர் அஸ்வத் நாராயணா ஆகியோருக்கும் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களுக்காக மந்திரிசபையில் அதே அளவுக்கு இடங்களை காலியாக வைக்க எடியூரப்பா முடிவு செய்துள்ளார். மந்திரி பதவி கிடைக்காதவர்கள் போர்க்கொடி தூக்கினால், அவர்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கி சமாதானப்படுத்தவும் எடியூரப்பா திட்டமிட்டுள்ளார். 50-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக மந்திரி பதவியை ஏற்பவர்கள் ஒவ்வொருவருக்கும் 2, 3 இலாகாக்கள் ஒதுக்கப்பட உள்ளது. சட்டப்படி கர்நாடக மந்திரிசபையில் முதல்-மந்திரி உள்பட 34 பேர் இடம் பெற முடியும். இப்போது முதல்-மந்திரி ஒருவர் மட்டுமே உள்ளார். மீதம் 33 இடங்கள் காலியாக உள்ளன. இன்று 17 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றால், மீதம் 16 இடங்கள் காலியாக இருக்கும்.

மந்திரிகள் பதிவு ஏற்பு விழாவையொட்டி கவர்னர் மாளிகையில் அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

புதிய மந்திரிகள் பதவி ஏற்பதையொட்டி, பெங்களூரு ராஜ்பவனை சுற்றியுள்ள சாலைகளில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News