செய்திகள்
குமாரசாமி

தொலைபேசி ஒட்டு கேட்பு: சிபிஐ விசாரணையை தைரியமாக எதிர்கொள்வேன்- குமாரசாமி

Published On 2019-08-20 01:58 GMT   |   Update On 2019-08-20 01:58 GMT
தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் எந்த மாதிரி விசாரணை நடத்தினாலும் நான் ஒத்துழைப்பு கொடுப்பேன். சி.பி.ஐ. விசாரணையை தைரியமாக எதிர்கொள்வேன் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.
சிக்கமகளூரு :

சிக்கமகளூருவில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கலசாவில் மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்தேன். மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டேன். இதுகுறித்து மத்திய-மாநில அரசிடம் தெரிவித்து, உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்துவேன். எடியூரப்பாவை போன்று நான் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யவில்லை. எடியூரப்பா ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதற்காக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கினார். நான் அதுபோன்று செய்யவில்லை. மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி அவற்றை தீர்க்க தான் நான் முயற்சி செய்தேன்.

நான் எப்போதும் என்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தவில்லை. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி என்னை பாதுகாத்து கொள்ள முயற்சிக்கவில்லை. விஸ்வநாத் தேவையில்லாத கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவர் மரியாதையுடன் பேச கற்றுக்கொள்ள வேண்டும். விஸ்வநாத்துக்கு மரியாதை என்றால் என்ன என்பதே தெரியாது. நான் யாரிடமும் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை. தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் எந்த மாதிரி விசாரணை நடத்தினாலும் நான் ஒத்துழைப்பு கொடுப்பேன். அதனை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். நான் தவறு செய்யவில்லை. தவறு செய்தால் தான் பயப்பட வேண்டும்.

சி.பி.ஐ. விசாரணையை தைரியமாக எதிர்கொள்வேன். என் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்தே ஓய்வு பெறுவேன். என்னை காப்பாற்றும்படி எடியூரப்பாவிடம் கெஞ்ச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News