செய்திகள்
பீகார் மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா

பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு

Published On 2019-08-19 07:38 GMT   |   Update On 2019-08-19 07:38 GMT
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 82.
புதுடெல்லி:

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா (வயது 82), கடந்த சில நாட்களாக முதுமை சார்ந்த உடல் நலக்குறைவின் காரணமாக தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலமானார். 

ஜெகன்நாத் மிஸ்ரா பீகார் மாநிலத்தின் 14 வது முதல் மந்திரி ஆவார். இவர் 1975 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் மூன்று முறை முதல்வராக பணியாற்றியுள்ளார்.

இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தற்போதைய பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், “டாக்டர் ஜெகன்நாத் மிஸ்ரா ஒரு சிறந்த தலைவரும், கல்வியாளருமாவார். பீகாருக்கு மட்டுமின்றி, தேசிய அரசியலுக்கு அவர் அளித்த பங்களிப்பு மகத்தானது. அவரது மறைவு பீகார் மாநிலத்திற்கு மட்டுமல்ல, அரசியல், சமூக மற்றும் கல்வியாளர்களின் முழு சகோதரத்துவத்திற்கும் ஒரு மிகப்பெரிய இழப்பாகும். அவரது மறைவிற்கு பீகாரில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்” என கூறினார்.

“ஜெகன்நாத் மிஸ்ரா ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம். அவரது குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்” என காங்கிரஸ் கட்சி சார்பில் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் இவர் மத்திய மந்திரியாகவும் பணியாற்றியுள்ளார். பின்பு ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். 2013 ம் ஆண்டு கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News