செய்திகள்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஹூடா

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து - காங்கிரஸ் கட்சியின் ஹூடா ஆதரவு

Published On 2019-08-19 07:03 GMT   |   Update On 2019-08-19 07:10 GMT
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், அரியானா முன்னாள் முதல்-மந்திரியுமான பூபிந்தர்சிங் ஹூடா ஆதரவு தெரிவித்து உள்ளார்.

சண்டிகார்:

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளன.

இந்தநிலையில் காஷ்மீர் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், அரியானா முன்னாள் முதல்-மந்திரியுமான பூபிந்தர்சிங் ஹூடா ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக ரோத்தக் நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற குடும்பத்தில் பிறந்தவன் நான். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததற்கு காங்கிரசை சேர்ந்த பல சகாக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அரசு ஏதாவது நல்லது செய்தால் அதை நான் ஆதரிப்பவன்.

காஷ்மீரில் நமது சகோதரர்கள் ராணுவ வீரர்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எனவே காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவை ஆதரிக்கிறேன்.

370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்ப்பவர்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன். நமது பாரம்பரியத்துக்கும், கொள்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டால் அதை எதிர்த்து போராட வேண்டும்.

காங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையுடன் செயல்படவில்லை. அது தனது தனித்தன்மையை இழந்துவிட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரசை எதிர்த்தும், மத்திய அரசை ஆதரித்தும் மூத்த தலைவர் பூபீந்தர் ஹூடா வின் கருத்தால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அரியானா மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் ஹூடோ காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாகவே அவர் காங்கிரசை விமர்சித்து இருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News