செய்திகள்
தேவேகவுடா

நாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது- தேவேகவுடா

Published On 2019-08-19 02:32 GMT   |   Update On 2019-08-19 02:32 GMT
சர்வாதிகார போக்கு அதிகரித்து வருகிறது என்றும், இதனால் நாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தேவேகவுடா கூறினார்.
பெங்களூரு :

ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

நான் இந்த தொகுதியின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. கோபாலய்யாவை அவதூறாக பேச இங்கு வரவில்லை. பணம் வாங்கிக்கொண்டு போனவர்கள் பற்றி பேச விரும்பவில்லை. கோபாலய்யாவின் மனைவிக்கு துணை மேயர் பதவி, நிதிக்குழு தலைவர் பதவி மற்றும் பல்வேறு நிலைக்குழு உறுப்பினர் பதவி வழங்கினோம். இப்போது பா.ஜனதாவுக்கு சென்று மனைவியை மேயராக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

அவர் கட்சியை விட்டு சென்றதன் பின்னணியில் வேறு காரணம் உள்ளது. அதை நான் இப்போது சொல்ல மாட்டேன். ஒவ்வொரு வார்டுக்கும் நான் வருகிறேன். பணம் பலத்தை கொண்டுள்ள கோபாலய்யாவை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். கோபாலய்யாவுக்கு நமது கட்சி அனைத்து பதவிகளையும் வழங்கியது. முன்பு அவரது வீட்டு வாசலில் போலீசார் வந்து நின்றபோது என்ன ஆனது?.

மனைவிக்கு துணை மேயர் பதவி வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து பதவியை பெற்றார். அவரது பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல் அதற்கு ஒப்புதல் வழங்கினேன். ஆனால் அவர் நமது கட்சியை விட்டு சென்றுவிட்டார். இதை நான் சவாலாக எடுத்துக் கொண்டுள்ளேன். இந்த தொகுதி மக்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.

கோபாலய்யாவின் பின்னால் வேறு ஒரு சக்தி உள்ளது. அந்த சக்தி எது என்பதை நான் இப்போது சொல்ல மாட்டேன். எங்கள் கட்சியை பாதுகாத்துக் கொள்ளும் பலம் எங்களுக்கு உள்ளது. கோபாலய்யா நன்றாக வளர்ந்துள்ளார். அவருக்கு இருக்கும் பண பலம் எங்களுக்கு இல்லை. நீங்கள் எந்த ஆசைகளுக்கும் அடிபணியக் கூடாது.

குமாரசாமியை முதல்-மந்திரி ஆக்குங்கள் என்று காங்கிரசிடம் நான் கேட்கவில்லை. முதல்-மந்திரி பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே பெயரை நாங்கள் பரிந்துரை செய்தோம். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள், குமாரசாமிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினர். முன்பு அனுபவித்த வேதனையை மீண்டும் அனுபவிக்க வேண்டாம் என்று கருதி இதை அப்போது சொன்னேன்.

காங்கிரஸ் தலைவர்கள் பிடிவாதமாக கூறியதால், குமாரசாமியை முதல்-மந்திரியாக்க நான் ஒப்புக்கொண்டேன். நாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சர்வாதிகார போக்கு அதிகரித்து கொண்டிருக்கிறது. இதை நாம் தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். மாநில கட்சிகள் இருக்கிறது என்பதை நாம் உலகுக்கு வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

இவ்வாறு தேவேகவுடா பேசினார்.
Tags:    

Similar News