செய்திகள்
முதல் மந்திரி எடியூரப்பா

போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் - எடியூரப்பா

Published On 2019-08-18 07:06 GMT   |   Update On 2019-08-18 07:06 GMT
கர்நாடகாவில் எம்.எல்.ஏ.க்களின் போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படும் என முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:

கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி கட்சிகள் 14 மாதங்கள் ஆட்சி செய்தது. அப்போது காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களின் போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக பா.ஜ.க.வை சேர்ந்த மூத்த தலைவர் ஆர்.அசோக் எம்.எல்.ஏ. தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. எச்.விஸ்வநாத் மைசூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது பலரது போன் ஒட்டுக் கேட்கப்பட்டது. தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் 17 பேரின் தொலைபேசியும் ஒட்டுக் கேட்கப்பட்டது என கூறினார்.

இந்த போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விசாரணை நடத்த தலைமை செயலாளருடன் ஆலோசித்து முடிவு எடுப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார். இந்த போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

இதற்கிடையே, இதற்கு விளக்கமளித்த குமாரசாமி, முதல்-மந்திரி பதவி நிரந்தரம் அல்ல என்று நான் அந்த பதவியில் இருந்தபோதே அடிக்கடி கூறி வந்தேன். எதிர்க்கட்சி தலைவர்களின் போனை ஒட்டுக்கேட்டு முதல்-மந்திரி பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை. இந்த விஷயத்தில் சிலர் எனக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என  டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், கர்நாடகாவில் எம்.எல்.ஏ.க்களின் போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படும் என முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல் மந்திரி எடியூரப்பா, முந்தைய அரசில் எம்.எல்.ஏ.க்களின் போன் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டசபை தலைவர் உள்பட பல உறுப்பினர்களும் விசாரணை நடத்த வலியுறுத்தி உள்ளனர். அதனால் இந்த விவகாரம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும். 

பா.ஜ.க. சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெறாது. 3 முதல் 4 நாட்களுக்கு பின்பே கூட்டம் நடைபெறும்.  கர்நாடக அமைச்சரவை வரும் 20ம் தேதி விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News