செய்திகள்
பிரதமர் மோடி

அக்டோபர் 2-ந் தேதி முதல் நாடு முழுவதும் பிளாஸ்டிக் தடை- பிரதமர் மோடி

Published On 2019-08-16 05:01 GMT   |   Update On 2019-08-16 05:01 GMT
அக்டோபர் 2-ந் தேதியன்று இந்தியாவை பிளாஸ்டிக் இல்லாத நாடாக மாற்ற நாட்டு மக்கள் உறுதியேற்க வேண்டும் என்று சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
புதுடெல்லி:

நாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி 6-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார்.

பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினார். அவர் பேசியதாவது:-

அக்டோபர் 2-ந் தேதியன்று இந்தியாவை பிளாஸ்டிக் இல்லாத நாடாக மாற்ற நாட்டு மக்கள் உறுதியேற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்காக ஒவ்வொரு குடிமகனும் நகராட்சிகளும், கிராம பஞ்சாயத்துகளும் ஒன்றிணைய வேண்டும்.

“இந்தியாவில் தயாரிப்போம்” திட்டத்தில் உற்பத்தியாகும் பொருளுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். சிறந்த வருங்காலத்திற்காக உள்ளூர் உற்பத்திப் பொருட்களை பயன்படுத்தி ஊரக பொருளாதாரத்திற்கும், சிறு-குறு நடுத்தரத் தொழில் துறைகளுக்கும் உதவுவது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

நமது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தளங்கள் வலுவாக உருவாகி உள்ளன. நமது கிராமப்புற கடைகள், சிறு கடைகள் மற்றும் சிறு நகர அங்காடிகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டும்.

ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதால் நமது மண் வளத்தை சிதைத்து வருகிறோம். காந்தியடிகள் ஏற்கனவே காட்டியுள்ள பாதையில் ரசாயன உரங்கள் பயன்பாட்டை 10 சதவீதமோ, 20 சதவீதமோ அல்லது 25 சதவீதமோ நாம் ஏன் குறைக்கக்கூடாது. நமது விவசாயிகள் என்னுடைய இந்த விருப்பத்துக்கு செவிமடுப்பார்கள் என்று உறுதியாக நம்புகின்றனர்.

இவ்வாறு அவர்பேசினார்.
Tags:    

Similar News