செய்திகள்
எடியூரப்பா

வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை- எடியூரப்பா அறிவிப்பு

Published On 2019-08-16 01:51 GMT   |   Update On 2019-08-16 01:51 GMT
கர்நாடகத்தில் வேலைவாய்ப்புகளில் கன்னடர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.
பெங்களூரு :

ஆண்டுதோறும் இந்திய சுதந்திரதின விழா ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

அதுபோல் இந்தியா முழுவதும் சுதந்திர தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

மேலும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா பெங்களூரு மானேக்‌ஷா அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா காலை 9 மணிக்கு தேசிய கொடியை ஏற்றினார். பிறகு அவர் போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். அதன் பிறகு எடியூரப்பா சுதந்திர தின உரையாற்றினார். அப்போது அவர் பேசிய தாவது:-

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கலாசாரம், பண்பாட்டை கொண்ட கர்நாடகம், செல்வ செழிப்புள்ள பாரம்பரியம் கொண்டது. அதிக இயற்கை வளம் மற்றும் அபாரமான மனித வளத்தை கொண்ட கர்நாடகம், வளர்ச்சியில் தேசிய அளவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. கர்நாடகத்தில் வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கான பிரதிநிதித்துவம் குறைந்து வருவதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது.

கர்நாடகத்தில் வேலை வாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பது எனது அரசின் நிலைப்பாடு. அரசின் கொள்கையும் இது தான். மாநில மக்களின் உணர்வுகளை எங்கள் அரசு மதிக்கிறது. கன்னடர்களின் சுயமரியாதை, கவுரவத்தை காப்பாற்றவும், அவர்களின் வேலைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் வேலை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.

கர்நாடகத்தில் வாழும் பிற மாநிலத்தை சேர்ந்த மக்கள், இங்குள்ள மொழி, கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையை கற்று, கன்னட கலாசாரத்தை மதிக்க வேண்டும். அதே நேரத்தில் உங்களின் தனித்தன்மையை காப்பாற்றி கொள்ளுங்கள். இந்த விஷயத்தில் கன்னடர்கள் பிறருக்கு முன்மாதிரியாக இருக்கிறார்கள்.

விவசாயிகளின் நலனை காக்க முதல் முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவித்தேன். அதன்படி பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கூடுதலாக கர்நாடக அரசு சார்பில் ரூ.4,000 வழங்கப்படும் என்று அறிவித்தேன். அதில் முதல் தவணையாக ரூ.2,000 ஒரு லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் சாகுபடி செய்யும் பசுமை தீவனத்தை அரசு கொள்முதல் செய்கிறது. இதற்கு வழங்கப்படும் விலை டன்னுக்கு ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நெசவாளர்களின் ரூ.1 லட்சம் வரையிலான கடனை தள்ளுபடி செய்ய ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.98.29 கோடி செலவாகும். மீனவர்களின் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் ஒட்டுமொத்த விவசாய நிலப்பரப்பில் 32.3 சதவீத நிலத்திற்கு மட்டுமே நீர்ப்பாசன வசதி உள்ளது. இன்னும் அதிகளவு நிலத்திற்கு பாசன வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் வருமானத்தில் தோட்டக்கலை பயிர்களின் பங்கு 32.45 சதவீதம் ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.



இந்த விழாவில் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் வானத்தில் பறந்து பூக்களை தூவியது. அதைத்தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட போலீஸ் உள்பட பல்வேறு குழுக்களின் அணிவகுப்பு மரியாதையை முதல்-மந்திரி எடியூரப்பா ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும், பல்வேறு பள்ளி மாணவர் களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் 1,250-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்று, சிறப்பான முறையில் நடனமாடினர்.

இதில் உத்தரஹள்ளியை சேர்ந்த அரசு பள்ளி குழந்தைகள் 650 பேர் பாரத தாய் குறித்த நிகழ்ச்சியை தத்ரூபமாக நடத்தி, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தனர். ஹாரோஹள்ளியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 600 குழந்தைகள், ஜாலியன் வாலாபாக் சோக சம்பவத்தை நினைவுகூறும் வகையில் சிறப்பான முறையில் நடிப்பை அரங்கேற்றினர்.

மெட்ராஸ் என்ஜினீயரிங் குழுவை சேர்ந்த 26 ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களின் பாராட்டை பெற்றனர். இந்த கலைநிகழ்ச்சி குழுக்களுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அணிவகுப்பில் கலந்து கொண்ட குழுக்களில் எல்லை பாதுகாப்பு படைக்கு முதல் பரிசும், மத்திய ஆயுதப்படை போலீஸ் படைக்கு 2-வது பரிசும், கர்நாடக அதிரடிப்படைக்கு 3-வது பரிசும் வழங்கப்பட்டது.

சுதந்திரதின விழாவையொட்டி மானேக்‌ஷா மைதானத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ரகசிய கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. இந்த விழாவில் பங்கேற்ற பார்வையாளர்களுக்கு சிறிய அளவில் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்த விழாவில் அரசின் உயர் அதிகாரிகள், முப்படைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதே போல் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர்கள் தேசிய கொடி ஏற்றினர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. மாநிலம் முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
Tags:    

Similar News