செய்திகள்
எடியூரப்பா

எடியூரப்பா மந்திரிசபை 18-ந் தேதி விரிவாக்கம்- கர்நாடகத்தில் 16 பேருக்கு மந்திரி பதவி

Published On 2019-08-14 02:00 GMT   |   Update On 2019-08-14 02:00 GMT
கர்நாடக மந்திரிசபை 18-ந் தேதி விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. முதல்கட்டமாக எடியூரப்பா மந்திரிசபையில் 16 பேருக்கு மந்திரி பதவி வழங்கப்பட இருக்கிறது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடந்து வந்தது.

இந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கடந்த மாதம் (ஜூலை) 23-ந்தேதி கவிழ்ந்தது. இதையடுத்து பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா கடந்த 26-ந் தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவர் முதல்-மந்திரியாக பதவி ஏற்று 20 நாட்கள் ஆகியும், இன்னும் மந்திரிகள் யாரும் நியமனம் செய்யப்படவில்லை.

மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்ட நேரத்தில், கர்நாடகத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து மந்திரி சபை விரிவாக்கத்தை எடியூரப்பா ஒத்திவைத்தார். தனி ஒருவராக இருந்து வெள்ள நிவாரண பணிகளை எடியூரப்பா மேற்கொண்டு வருகிறார். மந்திரிகள் நியமனம் செய்யப்படாததை, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கடுமையாக குறை கூறி வருகின்றன.

இந்த நிலையில் கர்நாடகத்தில் மழை குறைந்துள்ளதால், தற்போது வெள்ளம் வடிந்து வருகிறது. இதனால் நிலைமை சீரடைய தொடங்கியுள்ளது. இதையடுத்து மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக ஆலோசிக்க எடியூரப்பா 16-ந் தேதி (நாளை மறுநாள்) டெல்லி செல்கிறார். அங்கு பா.ஜனதா தேசிய தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார்.

அங்கு யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படுகிறது. அன்றைய தினமே மந்திரிசபை விரிவாக்கத்திற்கு ஒப்புதல் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 17-ந் தேதி எடியூரப்பா பெங்களூரு திரும்புவார் என்றும், 18-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் கவர்னர் மாளிகையில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்கட்டமாக எம்.எல்.ஏ.க்கள் ஆர்.அசோக், ஈசுவரப்பா, ஸ்ரீராமுலு, பாலச்சந்திர ஜார்கிகோளி, கோவிந்த் கார்ஜோள், போப்பையா, மாதுசாமி, சிவன்னகவுடா நாயக், அஸ்வத் நாராயணா, ரேணுகாச்சார்யா, ஜெகதீஷ் ஷெட்டர், கோடா சீனிவாசபூஜாரி, சசிகலா ஜோலே உள்பட 16 பேர் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது. மீதமுள்ள 17 இடங்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களுக்காக காலியாக வைக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. 
Tags:    

Similar News