செய்திகள்
உம்பா கிராமத்துக்கு பிரியங்கா காந்தி சென்ற காட்சி

உ.பி.யில் 10 பழங்குடியினர் சுட்டுக் கொல்லப்பட்ட கிராம மக்களை மீண்டும் சந்தித்தார் பிரியங்கா

Published On 2019-08-13 12:01 GMT   |   Update On 2019-08-13 12:01 GMT
உத்தரபிரதேச மாநிலத்தின் உம்பா கிராமத்தில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை இரண்டாவது முறையாக சந்தித்து பிரியங்கா காந்தி ஆறுதல் கூறினார்.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள உம்பா கிராமத்தில் கடந்த மாதம் (ஜூன் 17) நில தகராறு காரணமாக இரு பிரிவினருக்கிடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் பழங்குடியின மக்கள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 21 பேர் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆதரவு கூற காங்கிரஸ் கட்சியின் உ.பி. மாநில கிழக்குப்பகுதி பொறுப்பாளரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி கடந்த மாதம் சோன்பத்ராவுக்கு பயணம் மேற்கொண்டார்.

ஆனால், போலீசார் அவரை அனுமதிக்கவில்லை, அதனை தொடர்ந்து கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் இங்கிருந்து போவதில்லை என கூறி தொண்டர்களுடன் இணைந்து சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.



இறுதியில், கலவரத்தில் பாதிக்கப்பட்ட சிலரது உறவினர்கள் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தியை அவர் தங்கியிருந்த விடுதியில் சந்தித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆறுதல் கூறிவிட்டு டெல்லிக்கு திரும்பினார்.

இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலத்துக்குச் சென்ற பிரியங்கா காந்தி இன்று இரண்டாவது முறையாக சோன்பத்ரா கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார்.
 
Tags:    

Similar News