செய்திகள்
பியர் கிரில்சுடன் பிரதமர் மோடி

பயமா? எனக்கா?... -பியர் கிரில்சுடன் பிரதமர் மோடி பகிர்ந்த அசத்தலான தகவல்கள்

Published On 2019-08-13 09:51 GMT   |   Update On 2019-08-13 09:51 GMT
பிரபல தொலைக்காட்சி சேனலின் நிகழ்ச்சியான மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பியர் கிரில்சுடன் பிரதமர் மோடி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.
புது டெல்லி:

பிரபல தொலைக்காட்சி சேனலான டிஸ்கவரியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் மேன் vs வைல்ட். இந்த நிகழ்ச்சியை தொகுத்து உலகம் முழுவதும் பிரபலமானவர் பியர் கிரில்ஸ்.

இந்த நிகழ்ச்சியின் மூலம், காட்டுக்குள் வன விலங்குகளின் தன்மை என்ன? என்பது குறித்தும், காட்டில் இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டால் மனிதர்கள் தப்பிப்பது எப்படி? என்பது குறித்தும் அப்பகுதிகளுக்குச் சென்று விளக்கம் அளிப்பார்.

இந்த பிரபலமான நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி கலந்துக் கொண்டு காட்டுக்குள் பியர் கிரில்சுடன் பயணித்தார். இந்த நிகழ்ச்சி நேற்றிரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. இதில், பிரதமர் மோடி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள் பின்வருமாறு:

பயமா? எனக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது. அதனால் பயம் எப்படியிருக்கும் என்று எனக்கு தெரியாது. அதனால் பயத்தை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து விளக்க இயலவில்லை. ஆனால், நான் நேர்மறையான சிந்தனை கொண்டவன்.



இதன் காரணமாகவே நான் எப்போதும் ஏமாற்றமடைந்தது இல்லை. என் கனவுகள் எல்லாம் மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதில்தான் இருக்கிறது. தேசத்தின் வளர்ச்சியில்தான் என் முழுகவனம்.

இன்று இளைஞர்களுக்கு நான் ஏதாவது அறிவுரை சொல்ல வேண்டுமென்றால், நாம் நமது வாழ்வை பிரித்துப் பார்க்கக் கூடாது. வாழ்க்கையை முழுமையாகப் பாருங்கள். எப்போதாவது கீழே இறங்கினால் அதை நினைத்து வருந்தாதீர்கள்.  அங்கிருந்துதான் உங்கள் பயணம் தொடங்குகிறது.

குஜராத் முதல்வராக 13 ஆண்டுகள் பணியாற்றினேன். அந்த பயணம் எனக்கு புதிதாக இருந்தது. அப்போது இந்த தேசம் என்னை பிரதமர் பதவிக்கு வர வேண்டும் என விரும்பியது. இப்போது அது எனக்கு மனநிறைவை தருகிறது.

இன்று உங்களுடன் இந்த வனத்தில் சுற்றுவதுதான் கடந்த 18 ஆண்டுகளில் நான் எடுத்த முதல் விடுமுறை. நான் அன்று முதல்வராக இருந்தபோதும் சரி, இன்று பிரதமராக இருக்கும்போதும் சரி எனது பொறுப்புகள் மட்டுமே என் கண் முன் நிற்கின்றன. எனது பதவி, அந்தஸ்து என் தலைக்கு  எப்போதுமே ஏறியதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.











Tags:    

Similar News