செய்திகள்
காற்றில் வந்த கடிதத்துடன் நிர்மலா சீதாராமன்

காற்றில் பறந்து வந்த கோரிக்கை கடிதம்.. காரை நிறுத்தி தீர்வு சொன்ன நிதி மந்திரி...

Published On 2019-08-13 08:57 GMT   |   Update On 2019-08-13 08:57 GMT
கர்நாடகாவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட வந்தபோது, தன் காரை நோக்கி வீசப்பட்ட கடிதத்திற்கு தீர்வு வழங்கியுள்ளார்.
பெங்களூரு:

கர்நாடகா மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது.  பெலகாவி, பாகல்கோட்டை, யாதகிரி, கார்வார், மங்களூரு, குடகு, ஹாசன், மைசூரு ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து வந்ததால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பின. தொடர்ந்து பெய்த கனமழையால் ஏராளமான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பெலகாவி மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் உடைமைகள், வீடுகள் என அனைத்தையும் இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். அப்போது காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, காற்றில் மிதந்து கடிதம் ஒன்று பறந்து வந்து விழுந்துள்ளது.



இதனை கவனித்த நிர்மலா, காரை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டார். இந்த கடிதத்தை அங்கிருந்த பெண் ஒருவர் கார் மீது தூக்கி வீசியுள்ளார். இதில் வெள்ளத்தால் வீடின்றி தவிக்கும் தனக்கு வீடு கட்டி தருமாறு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இதையடுத்து அந்தப்பெண்ணை அழைத்து பேசிய நிர்மலா, பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் குறித்து விளக்கினார். பின்னர், ‘வீட்டிற்காக நீங்கள் அழ வேண்டிய அவசியம் இல்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உங்களுக்கு வீடு கட்டி தரப்படும். உங்கள் பெயரும் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் சேர்க்கப்படும்’ என உறுதி அளித்து தீர்வு வழங்கினார். 

Tags:    

Similar News