செய்திகள்
கேரளா வியாபாரி நவ்ஷத்

பக்ரீத்தை நான் இப்படித்தான் கொண்டாடினேன்.. -நெகிழ்ச்சி தருணம்

Published On 2019-08-12 09:19 GMT   |   Update On 2019-08-12 09:19 GMT
கேரளாவைச் சேர்ந்த ஒருவர், பக்ரீத் பண்டிகையை அனைவரும் பாராட்டக்கூடிய வகையில் கொண்டாடியுள்ளார். அப்படி என்ன செய்தார்? என்பதை பார்ப்போம்.
திருவனந்தபுரம்:

இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கேரள மாநிலத்தில் கனமழை கொட்டி தீர்த்ததில் அங்கு பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பல மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள நவ்ஷத் எனும் வியாபாரி, செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.



இவர் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு  உடைகள் வியாபாரம் செய்ய வைத்திருந்த அனைத்து உடைகளையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார்.

இது குறித்து நவ்ஷத் கூறுகையில், ‘கடந்த முறை கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டபோதும் நான் இப்படித்தான் செய்தேன். இப்போதும் இதைத்தான் செய்கிறேன்.

இவை அனைத்தும் எனக்கு கடவுள் அருளியது. அதனை மக்களுக்கு கொடுக்கிறேன். இப்படித்தான் நான் இன்று பக்ரீத்தை கொண்டாடினேன். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது’ என கூறியுள்ளார். நவ்ஷத்துக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.





Tags:    

Similar News