செய்திகள்
கேரள மாநிலம் கொச்சியில் வெள்ளம் சூழ்ந்த பகுதி.

வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்

Published On 2019-08-12 01:18 GMT   |   Update On 2019-08-12 01:18 GMT
வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
புதுடெல்லி:

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்ஜில் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டில் சில மாநிலங்கள், தொடர் மழை காரணமாக வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளன. இதனால் நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். கால்நடைகளும் பலியாகி விட்டன. எண்ணற்ற குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன.



இந்த நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும். மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவம், கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் தனிநபர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

இத்தனை பேர் வெள்ளத்தால் உயிரிழந்ததுடன், ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேறியும் மத்திய பா.ஜனதா அரசு, வெள்ள பாதிப்பின் தீவிரத்தை உணரவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் கேட்ட நிவாரண நிதியையும் விடுவிக்கவில்லை, இந்த வெள்ள பாதிப்பை ‘தேசிய பேரிடர்’ ஆகவும் அறிவிக்கவில்லை.புகைப்படம் எடுக்கும் பணியை நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் இந்த அரசு, அக்கறையின்றியும், மெத்தனமாகவும், பாரபட்சமாகவும் நடந்துகொள்கிறது.

அசாம் மாநிலம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டபோதிலும், இதுவரை மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

கேரள மாநிலம் கடந்த ஆண்டு வெள்ளத்தால் ரூ.10 ஆயிரம் கோடி ந‌‌ஷ்டத்தை சந்தித்தது. ஆனால், மத்திய அரசு வெறும் ரூ.3 ஆயிரம் கோடி மட்டுமே அளித்துள்ளது. கேரளா இப்போதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதால், பிரதமர் மோடி பாரபட்ச அரசியலை கைவிட்டு, போதிய நிதி வழங்க வேண்டும்.

ஆகவே, இந்த வெள்ளத்தை ‘தேசிய பேரிடர்’ ஆக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News