செய்திகள்
விழாவில் தலைமையுரை நிகழ்த்தும் துணை ஜனாதிபதி

சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைய வேண்டும் - துணை ஜனாதிபதி விருப்பம்

Published On 2019-08-11 10:40 GMT   |   Update On 2019-08-11 10:40 GMT
தேங்கி நிற்கும் வழக்குகளை விரைவாக முடிக்க சென்னை உள்ளிட்ட 4 முக்கிய நகரங்களில் சுப்ரீம் கோர்ட்டின் கிளை அமர்வுகள் அமைய வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.
சென்னை:

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த 2 ஆண்டுகளில் செய்த பணிகளை ஆவணப்படுத்தும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஏற்பாட்டில், “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” எனும் தலைப்பில் புத்தகம் தயாரிக்கப்பட்டது.

இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்கினார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புத்தகத்தை வெளியிட்டார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்ற இவ்விழாவில் தலைமையுரை ஆற்றிய வெங்கையா நாயுடு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்னும் ஜனாதிபதியின் பரிந்துரைகளை வரவேற்பதாக தெரிவித்தார்.



’கடந்த 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஒருவர் பெற்ற வெற்றி செல்லாது என அப்போது சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டு வழக்கு 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் மற்றும் சமீபத்தில் நடந்து முடிந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகும் இன்னும் தீர்ப்பளிக்கப்படாமல் விசாரணை நிலையில்தான் உள்ளது.

இதுபோன்ற வழக்குகள் 6 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று காலநிர்ணயம் செய்யப்பட வேண்டும். இதுதொடர்பாக நாம் அனைவரும் மீள்பார்வை செய்து தீர்வு காண வேண்டும்.

மத்திய நிலைக்குழு பரிந்துரைத்ததைப்போல் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க நாட்டின் தெற்கு, மேற்கு மற்றுக் கிழக்கு பகுதிகளில் சுப்ரீம் கோர்ட்டின் கிளை நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு சார்ந்த வழக்குகளை விசாரிக்க தனி அமர்வும், மேல் முறையீட்டு வழக்குகளை விசாரிப்பதற்கென தனி அமர்வுகளும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இதன் முதல் துவக்கமாக சென்னையில் சுப்ரீம் கோர்ட்டின் கிளை அமைக்கப்பட வேண்டும்’ என அவர் குறிப்பிட்டார்.

விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுபெற விரும்புவதாகவும் குறிப்பிட்ட வெங்கையா நாயுடு தனது சொந்த கிராமத்துக்கு சென்று சமூகச்சேவை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இந்த முடிவை பிரதமர் மோடியிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும் கூறினார்.

Tags:    

Similar News