செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

குவைத்தில் அடைத்து வைத்திருக்கும் தமிழர்களை மீட்கக்கோரி வழக்கு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Published On 2019-08-10 23:34 GMT   |   Update On 2019-08-10 23:34 GMT
வேலைக்காக அழைத்து சென்று குவைத்தில் அடைத்து வைத்திருக்கும் தமிழர்களை மீட்கக்கோரிய வழக்கு தொடர்பாக மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி:

வேலைக்காக அழைத்து சென்று குவைத்தில் அடைத்து வைத்திருக்கும் தமிழர்களை மீட்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

தமிழகத்தை சேர்ந்த ஆயிஷா பானு, ஷர்மிளா, லிங்கமுத்து ஆகியோர் முகவர்களிடம் அதிக பணம் செலுத்தி குவைத்தில் வீட்டு வேலைக்காக சென்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு கடந்த சில மாதங்களாக உணவு, சம்பளம் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் அளிக்காமல் ஒரு நிறுவனம் அடைத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை நாடியும் எந்த பயனும் இல்லை. தற்போது அவர்களின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், மேலும் பணம் கொடுத்தால் மட்டுமே அவர்களை விடுவிக்க முடியும் என குவைத் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே அவர்கள் 3 பேரையும் உடனடியாக மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி அவர்களது உறவினர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் குடும்ப வறுமையை பயன்படுத்தி பல பெண்களை ஏமாற்றி வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லும் முகவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.வி.ரமணா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் நாகமுத்து ஆஜராகி வாதிட்டார். அவர் தனது வாதத்தில், வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் பிலிப்பைன்ஸ், இலங்கை நாடுகளில் சட்டம் உள்ளதைப்போல இந்தியாவிலும் சட்டம் இயற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து குவைத்தில் பாதிக்கப்பட்டுள்ள தமிழக பெண்களை மீட்பது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் தமிழகத்தில் உள்ள போலி முகவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 6 வாரத்தில் பதிலளிக்க தமிழக டி.ஜி.பி.க்கு நோட்டீஸ் அனுப்புமாறும் தங்கள் உத்தரவில் அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News