செய்திகள்
வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகின் மூலம் மீட்பு

வெள்ளத்தில் தத்தளிக்கிறது பாலக்காடு மாவட்டம் - படகுகள் மூலம் மக்கள் மீட்பு

Published On 2019-08-10 06:46 GMT   |   Update On 2019-08-10 06:46 GMT
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து பாலக்காட்டில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தண்ணீரில் தத்தளித்தனர். வெள்ளத்தில் சிக்கிய மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் கோவையை யொட்டிள்ள பாலக்காடு மாவட்டம் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இங்குள்ள சேகரிபுரம், அம்பிகாபுரம், சந்தரம் காலனி, சங்குவாரதோடு, கள்ளியோடு, ஒலவக்கோடு, யாக்கிரை, மணப்புள்ளிக்காவு, பெருவெம்பு, அப்பளம், தோட்டுப்பாலம், தண்ணீர் பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் கடல்போல் வெள்ளம் காட்சியளிக்கிறது.

குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தண்ணீரில் தத்தளித்தனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் பொதுமக்களுடன் மீட்டனர். ஆண்டிமடம் காலனியில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு வெள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டன. கொட்டும் மழையிலும் மின்கம்பங்கள் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மலைப்பகுதியான மன்னார்காடு, பாலக்காடு, கரிம்பா, அட்டப்பாடி, வடக்கஞ்சேரி மங்கலம் அணை அருகே உள்ள ஓடன்தோடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

சிறுவாணி மலைப்பகுதி இஞ்சிகுன்னு அருகே 40 அடி சாலை வெள்ளத்தில் அடித்துச்சென்றன. சாலையின் மறுபுறம் பணிக்கு சென்ற நீர்பாசன துறையினர் 20 பேர் சிக்கித்தவித்தனர். அவர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பாலக்காடு- அட்டப்பாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய நதியான பாரதப்புழா ஆறு கரைபுரண்டு வெள்ளம் ஓடுவதால் பட்டாம்பி பாலத்தில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

சொர்ணூர்- பாலக்காடு ரெயில்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து கனமழை பெய்வதால் பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனர். மாவட்டத்தில் 828 வெள்ள நிவாரண முகாம் திறக்கப்பட்டுள்ளன. 2 ஆயிரத்து 600 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள கஞ்சிரப்புழை, மங்கலம், வாளையார் உள்ளிட்ட அனைத்து அணைகளிலும் வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை மீட்பது மற்றும் சீரமைப்பது குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News