செய்திகள்
எடியூரப்பா

மழை கோரதாண்டவம்: நிவாரண பணிகளை மேற்கொள்ள தனி ஆளாக தடுமாறும் எடியூரப்பா

Published On 2019-08-10 02:06 GMT   |   Update On 2019-08-10 02:06 GMT
மழை கோரதாண்டவமாடுவதால், மந்திரிகள் இல்லாததால் நிவாரண பணிகளை மேற்கொள்ள தனி ஆளாக எடியூரப்பா தடுமாறி வருகிறார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அரசு நடந்து வந்தது. இந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து குமாரசாமி அரசு கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி கவிழ்ந்துவிட்டது. இதனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, எடியூரப்பா முதல்-மந்திரியாக அதே மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றார்.

மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்க முதல்-மந்திரி எடியூரப்பா கடந்த 5-ந் தேதி டெல்லி சென்றார். அங்கு காஷ்மீர் பிரிப்பு விஷயத்தில் பா.ஜனதா தேசிய தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா மும்முரமாக இருந்தார். எடியூரப்பா டெல்லியில் இருந்த நேரத்தில், வட கர்நாடகத்தில் கனமழை கொட்டி, பல பகுதிகளில் வெள்ளத்தில் தத்தளித்தன.

மழை வெள்ளத்தால் வடகர்நாடகத்தின் நிலைமை மிக மோசமானது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய யாருமே இல்லையா? என்ற கேள்வி எழுந்தது. கர்நாடகத்தில் அரசு என்று ஒன்று இருக்கிறதா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். எதிர்க்கட்சிகள் பா.ஜனதாவையும், எடியூரப்பாவையும் மிக கடுமையாக விமர்சித்தன. இதையடுத்து மந்திரிசபை குறித்த ஆலோசனையை ரத்து செய்த அமித்ஷா, உடனே கர்நாடகத்திற்கு திரும்பி, மழை வெள்ள பாதிப்புகளுக்கு உரிய உதவிகளை செய்யும்படி எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து எடியூரப்பா, தனது டெல்லி பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு 7-ந் தேதி அவசர அவசரமாக கர்நாடகம் திரும்பினார். அன்று மாலை பெங்களூரு வந்த அவர், உடனே தனி விமானத்தில் பெலகாவிக்கு சென்றார். அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மீட்பு, நிவாரண பணிகள் குறித்து விவரங்களை சேகரித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்காக 200-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வட கர்நாடகத்தில் பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, தார்வார், யாதகிரி, ராய்ச்சூர், விஜயாப்புரா உள்ளிட்ட மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. எடியூரப்பா ஒவ்வொரு மாவட்டமாக சென்று மழை பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார். வட கர்நாடகம் மட்டுமின்றி தென் கர்நாடகத்தின் உள் மாவட்டங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.



ஆனால் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க முதல்-மந்திரியை தவிர, மந்திரிகள் இல்லாத நிலை உள்ளது. முதல்-மந்திரி ஒரு நாளைக்கு ஒரு மாவட்டத்தில் மட்டுமே ஆய்வு நடத்த முடியும். பாதிக்கப்பட்ட மாவட்டங்களை ஆய்வு செய்ய மந்திரிகள் இல்லை.

இதனால் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய நேரத்தில் உதவிகள் கிடைக்கவில்லை என்று அந்த மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். பேரிடர் போன்ற இத்தகைய நெருக்கடியான நிலையில் மந்திரிகளின் பணி மிக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஆனால் மந்திரிகள் இல்லாததால், எடியூரப்பா மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை செய்ய முடியாமல் தடுமாறி வருகிறார். அவர் மீது பணிச்சுமை என்பது தாங்க முடியாத அளவுக்கு இருக்கிறது. அவர் தன்னால் இயன்ற பணிகளை செய்து வருகிறார். ஆனால் அவரால் மின்னல் வேகத்தில் செயல்பட முடியாது. மந்திரிகள் இல்லாத நிலையை கண்டு எதிர்க்கட்சிகள் பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

மந்திரிகள் நியமனம் தற்போதைக்கு இல்லை என்று கூறப்படுகிறது. மழை வெள்ள பாதிப்புகள் குறைந்த பிறகே மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய எடியூரப்பா திட்டமிட்டுள்ளார். இப்போது எடியூரப்பா தனி ஒருவராக இருந்து மழை பாதிப்புகளை கையாண்டு வருகிறார். இந்த மழை முடிவுக்கு வந்தால் தான் எடியூரப்பா நிம்மதியாக மூச்சுவிட முடியும்.

எடியூரப்பா கடந்த 2009-ம் ஆண்டு முதல்-மந்திரியாக இருந்தபோது இதே போல் வட கர்நாடகத்தில் பெருமழை பெய்து, வரலாறு காணாத பாதிப்புகள் ஏற்பட்டன. அப்போது 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இடம் மாற்றப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News