செய்திகள்
காஷ்மீர்

பக்ரீத் பண்டிகை - காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்த ராணுவம் முடிவு

Published On 2019-08-08 09:26 GMT   |   Update On 2019-08-08 09:26 GMT
பக்ரீத் பண்டிகைக்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் பெரும்பாலான கட்டுப்பாடுகளை தளர்த்த ராணுவ அதிகாரிகள் மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளனர்.
புதுடெல்லி:

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை தொடர்ந்து அம்மாநிலத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய நகரங்களில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள சுமார் 1 லட்சம் ராணுவ வீரர்கள் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

370-வது பிரிவை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் வன்முறை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஊரடங்கு உத்தரவும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கும் நிலை காணப்படுகிறது.

கடந்த 4 நாட்களாக காஷ்மீரில் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் வருவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக காஷ்மீரில் மிகப்பெரிய அளவுக்கு வன்முறை சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. சில இடங்களில் மட்டும் ஓரிரு இளைஞர்கள் வந்து கல்வீசி விட்டு ஓடினார்கள்.

தகவல் தொடர்பு துண்டிப்பு காரணமாக வன்முறை எங்கும் ஏற்படவில்லை. தற்போது காஷ்மீரில் அமைதி நிலவுகிறது. எனவே கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

காஷ்மீரில் வெள்ளிக்கிழமை அதிகளவு முஸ்லிம்கள் பொது இடங்களில் கூடி தொழுகை நடத்துவார்கள். எனவே நாளை தொழுகைக்கு உதவும் வகையில் சில கட்டுப்பாடுகளை ரத்து செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

வருகிற திங்கட்கிழமை பக்ரீத் பண்டிகை வருகிறது. எனவே அதற்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் பெரும்பாலான கட்டுப்பாடுகளை தளர்த்த ராணுவ அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

Tags:    

Similar News