செய்திகள்
பால் தாக்கரே

பிரதமர் பதவிக்கான முதல் தேர்வாக சுஷ்மா சுவராஜை கருதிய பால் தாக்ரே

Published On 2019-08-07 11:49 GMT   |   Update On 2019-08-07 12:54 GMT
பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்படுவதற்கு முன்னர் இதற்கான முதல் தேர்வாக சுஷ்மா சுவராஜை சிவசேனா தலைவர் பால் தாக்ரே கருதியதாக தெரியவந்துள்ளது.
மும்பை:

வெளியுறவுத்துறை மந்திரியாகவும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர் சுஷ்மா சுவராஜ் . இந்தியாவின்  15-வது மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 

சுஷ்மா டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார். மேலும் இவர்  வெளியுறவுத் துறை மந்திரியாக 2014 முதல்  2019  வரை பதவியில் இருந்தார்.  மாரடைப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுஷ்மா சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். 

இந்நிலையில், சுஷ்மா ஸ்வராஜின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ்தாக்ரே கூறியதாவது:-



இந்தியாவின் மிக சிறந்த சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. சுஷ்மா அவர்களின் இறப்பு நாடு மற்றும் பாஜகவுக்கு மட்டுமல்லாமல் எங்கள் குடும்பத்திற்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், எனது தந்தை பால் தாக்கரே மறைவின் போது ஏற்பட்ட சோக உணர்வு மீண்டும் எங்கள் குடும்பத்தில் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், சுஷ்மாவின் மறைவிற்கு அஞ்சலி தெரிவித்து பேசிய சிவசேனா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரவுத் கூறியதாவது:-

சிவசேனா கட்சியின் முன்னாள் தலைவர் பால் தாக்கரேவுக்கும் சுஷ்மாவுக்கும் இடையேயான உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அவர் சுஷ்மா சுவராஜை மிகவும் வலிமைவாய்ந்த தலைவராக கருதினார். தேசிய அளவிலான அரசியலில் நரேந்திர மோடி பிரபலம் அடைவதற்கு முன்னர் சுஷ்மா ஸ்வராஜையை பிரதம வேட்பாளருக்கான முதல் தேர்வாக பால் தாக்கரே எண்ணினார்.

இவ்வாறு அவர் கூறினார்.    
Tags:    

Similar News