செய்திகள்
எய்ம்ஸ் மருத்துவமனை

உன்னாவ் பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை

Published On 2019-08-07 08:03 GMT   |   Update On 2019-08-07 08:03 GMT
ரேபரேலி அருகே விபத்தில் படுகாயம் அடைந்த உன்னாவ் பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலத்தில் உன்னாவ் என்ற இடத்தில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் கைதானார்.

இதனால் இந்த வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கற்பழிக்கப்பட்ட உன்னாவ் பெண் அவரது குடும்பத்தினர் மற்றும் வக்கீல் மகேந்திரசிங் உள்ளிட்ட 4 பேர் கடந்த வாரம் காரில் சென்று கொண்டிருந்தனர்.

ரேபரேலி அருகே சென்றபோது வேகமாக வந்த லாரி இவர்களது கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் உன்னாவ் பெண்ணும், அவரது வக்கீலும் படுகாயம் அடைந்தனர். பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.

காயம் அடைந்த உன்னாவ் பெண்ணும், அவரது வக்கீலும் லக்னோவில் உள்ள கே.ஜி.எம்.சி. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இந்த நிலையில் அவர்களை மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து உன்னாவ் பெண் விமானம் மூலம் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே உன்னாவ் பெண்ணின் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் ஆஸ்பத்திரி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், உன்னாவ் பெண் நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர் செயற்கை சுவாசத்துடன் கூடிய உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலை மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளது.

அவருக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

உன்னாவ் பெண்ணுடன் விபத்தில் சிக்கிய அவரது வக்கீல் மகேந்திர சிங்கின் உடல்நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. மயக்க நிலையில் இருக்கும் அவருக்கு திறன் மிகுந்த உயிர் காக்கும் கருவிகள் உதவி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News