செய்திகள்
மாநிலங்களவையில் சுஷ்மாவுக்கு இரங்கல்

பாராளுமன்ற மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Published On 2019-08-07 07:33 GMT   |   Update On 2019-08-07 09:07 GMT
ஜூன் 20ம் தேதி தொடங்கிய பாராளுமன்றத்தின் மாநிலங்களவையின் முதல் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் இன்று ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:

பாராளுமன்றத்துக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் நடைபெற்ற தேர்தலுக்கு பின்னர் ஜூன் 20-ம் தேதி பாராளுமன்ற மாநிலங்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. 

ஜூலை மாதம் 26-ம் தேதியுடன் இந்த கூட்டத்தொடர் நிறைவடையும் என்று முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் ஆகஸ்ட் 7-ம் தேதிவரை கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், மாநிலங்களவை இன்று காலை கூடியதும், முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவை உறுப்பினர்கள் 2 நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

முத்தலாக், தேசிய மருத்துவ ஆணையம், அணைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன.

இதுதொடர்பாக, மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு கூறுகையில், பாராளுமன்ற கூட்டத்தொடர் 17 ஆண்டுகளில் முதல் முறையாக சிறப்பாக நடந்துள்ளது. மாநிலங்களவையின் 35 அமர்வுகளில் 32 மசோதாக்கள்  நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் மக்களவை கூட்டத்தொடர் நேற்று இரவு நிறைவடைந்துள்ள நிலையில், மாநிலங்களவை கூட்டத்தொடரும் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  
Tags:    

Similar News