செய்திகள்
பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் - வைரல் புகைப்படம்

வெள்ளை கொடி ஏந்திய பாகிஸ்தான் வீரர்கள் - வைரல் பதிவுகளின் பகீர் பின்னணி

Published On 2019-08-06 07:35 GMT   |   Update On 2019-08-06 07:35 GMT
இந்தியாவில் காஷ்மீர் விவகாரம் சர்ச்சை சூழலை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், வெள்ளை கொடி ஏந்திய பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.



ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான மசோதா இன்று (ஆகஸ்ட் 6) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. வரலாற்று பதிவுகளில் முக்கிய முடிவை அறிவிக்கும் முன் ஜம்மு-காஷ்மீர் முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் பதற்ற சூழ்நிலையை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில் பாகிஸ்தான் நாட்டு ராணுவ வீரர்கள் இந்திய வீரர்களிடம் வெள்ளை கொடியை அசைக்கும் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது.

இத்துடன் அந்த பதிவில், "மோடி-மோட்டா பாய் தெரப்பி. நம் வீர படைகளின் நடவடிக்கைக்கு கிடைத்த பரிசு. பாகிஸ்தான் வீரர்கள் வெள்ளை கொடியசைத்து அமைதியை விரும்புவதாக தெரிவிக்கின்றனர். நம் படைகளால் பெருமை கொண்டு ஜெய் ஜவான் என கூறுவோம்." என எழுதப்பட்டுள்ளது. 

இந்த ஃபேஸ்புக் பதிவில் பலர், ஜெய் ஹிந்த் மற்றும் இந்தியன் ஆர்மி சிந்தாபாத் என பலர் கமென்ட் செய்துள்ளனர். பலர் இதே பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.



வைரல் புகைப்படத்துடன் பரவும் தகவல் முற்றிலும் பொய் என தெரியவந்துள்ளது. உண்மையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஏழு வயது சிறுவன் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தான். உயிரிழந்த சிறுவனின் உடலை பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ராணுவ வீரர்களிடம் ஒப்படைக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் பரப்பப்படுகிறது. இது கடந்த மாதம் எடுக்கப்பட்டதாகும்.

இந்த புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் செய்யும் போது, இது ஜூலை 11 ஆம் தேதி எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இதனை செய்தியாளர் ஆதித்ய ராஜ் கௌல் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் அதே நாளில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இதே சம்பவத்தை உறுதிப்படுத்தும் பல்வேறு செய்திகள் வலைத்தளங்களில் கிடைக்கிறது.

அந்த வகையில் புகைப்படத்துடன் பரப்பப்படும் தகவலில் துளியும் உண்மையில்லை என்பது உறுதியாகியுள்ளது. போலி தகவல்களை பரப்பாதீர்கள். சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிரும் முன் அவற்றின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.

தகவலின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளாமல் பரப்பப்படும் பொய் தகவல்களால் பலர் பாதிக்கப்படுகின்றனர். பல சமயங்களில் போலி தகவல்களால் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கிறது.
Tags:    

Similar News