செய்திகள்
குலாம்நபி ஆசாத்

இந்தியாவின் தலையை வெட்டி விட்டார்கள் - குலாம்நபி ஆசாத் ஆவேசம்

Published On 2019-08-05 22:13 GMT   |   Update On 2019-08-05 22:13 GMT
இந்தியாவின் தலையாக உள்ள காஷ்மீரை வெட்டி விட்டார்கள் என்று குலாம்நபி ஆசாத் கூறினார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற மாநிலங்களவையில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் மசோதா மீதான விவாதத்தில், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம்நபி ஆசாத் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

காஷ்மீர் குறித்து உள்துறை மந்திரி பேசியபோது, சபையில் அணுகுண்டு வெடித்ததுபோல் இருந்தது. இந்தியாவின் கிரீடமாக, தலையாக காஷ்மீர் இருந்தது. அந்த தலையை வெட்டுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், வெட்டி விட்டார்கள்.

இந்த அறிவிப்பின் மூலம், இந்திய வரைபடத்தில் இருந்து காஷ்மீர் நீக்கப்பட்டு விட்டது. அதன் அடையாளம் அழிக்கப்பட்டு விட்டது. அதை வெறும் யூனியன் பிரதேசமாக மாற்றி விட்டார்கள். துணைநிலை ஆளுநர் மூலம் நிர்வகிக்க விரும்புகிறார்கள்.

காஷ்மீர் மக்கள், இந்திய ராணுவத்தின் பக்கமே இருந்தனர். ஒரே மதமாக இருந்தபோதிலும், பாகிஸ்தானை தவிர்த்தனர். அதற்கு பதிலாக இந்தியாவின் மதச்சார்பின்மையை ஏற்றுக்கொண்டனர்.

ஆனால், இன்று நீங்கள் மீண்டும் பிரிவினைக்கு அடித்தளம் அமைத்து இருக்கிறீர்கள். மசோதாக்கள் மூலமாக ஒருங்கிணைப்பு வராது. இதயம் மூலமாகவே வரும். இந்த மசோதா நிறைவேறும்போது, அது இந்திய வரலாற்றில் கரும்புள்ளியாக அமையும்.

நீங்கள் காஷ்மீரை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறீர்கள். அதிகார போதையில் மாநிலத்தின் வரலாற்றை நசுக்கப்பார்க்கிறீர்கள். இதுபோல், குஜராத்தை யூனியன் பிரதேசமாக்க மசோதா கொண்டு வரத் தயாரா? புதிய இந்தியா என்று பேசிக்கொண்டு, பழைய இந்தியாவை உடைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

இவ்வாறு குலாம்நபி ஆசாத் பேசினார்.

பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில், குலாம்நபி ஆசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், நாட்டுக்கு பா.ஜனதா துரோகம் செய்து விட்டதாகவும், காஷ்மீரை துண்டு துண்டாக உடைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
Tags:    

Similar News