செய்திகள்
ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக்

வதந்திகளை நம்ப வேண்டாம் - அரசியல் கட்சிகளுக்கு காஷ்மீர் ஆளுநர் வேண்டுகோள்

Published On 2019-08-03 06:17 GMT   |   Update On 2019-08-03 06:17 GMT
அமர்நாத் யாத்திரை விவகாரத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கையை மற்ற விவகாரங்களுடன் இணைத்து பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்ரீநகர் :

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3,880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வருவது வழக்கம்.
  
இந்தாண்டும் அமர்நாத் பனிலிங்கத்தை காண யாத்ரீகர்கள் வந்தவண்ணம் உள்ளனர். காஷ்மீரில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே, அமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் அனைவரும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என மாநிலம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் ஆளுநர் சதய்பால் மாலிக்கை நேற்று  நேரில் சந்தித்து பேசினர். இந்த அறிவிப்பால் காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது என அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆளுநர் சத்யபால் மாலிக் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததால், அமர்நாத் யாத்திரை முடித்த பக்தர்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதை மற்ற பிரச்சனைகளுடன் இணைத்து பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். அது தேவையற்ற பீதியை மக்களிடையே ஏற்படுத்தும். எனவே அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம், அமைதி காக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.  
Tags:    

Similar News