செய்திகள்
சுற்றுலா பயணிகள்

காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் வெளியேற்றம் - மிகப்பெரிய நாசவேலைக்கு பயங்கரவாதிகள் முயற்சி

Published On 2019-08-03 05:43 GMT   |   Update On 2019-08-03 05:43 GMT
பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக காஷ்மீருக்கு வந்திருக்கும் 5,000 சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேறும்படி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு:

காஷ்மீரில் இமயமலை பகுதியில் புகழ் பெற்ற அமர்நாத் குகை கோவில் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த சீசனில் அந்த குகைக் கோவிலில் தோன்றும் பனிலிங்கத்தை வழிபடுவதற்காக நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் காஷ்மீர் செல்வது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான காஷ்மீர் அமர்நாத் யாத்திரை கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதி தொடங்கியது. இதுவரை சுமார் 3 லட்சம் பக்தர்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டு பனி லிங்கத்தை வழிபட்டுள்ளனர்.

வருகிற 15-ந் தேதி வரை பக்தர்கள் அமர்நாத் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தட்ப வெப்ப நிலை காரணமாக தற்காலிகமாக யாத்திரை ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை கண்டுபிடித்தது. மேலும் காஷ்மீரில் உள்ள வெளி நாட்டு சுற்றுலா பயணிகளை குறி வைத்தும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்தது.

இதையடுத்து அமர்நாத் யாத்திரை நடைபெறும் மலை பாதையில் வழிநெடுக பாதுகாப்பு படைகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது யாத்திரை பாதையின் ஒரு இடத்தில் மிகப்பெரிய ஆயுதக்குவியல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வெடிகுண்டுகள், நவீன துப்பாக்கிகள், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன டெலஸ்கோப்புகள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதன் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீரில் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டிருப்பது உறுதியானது.

யாத்திரை பாதையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதக் குவியலில் இருந்த வெடிகுண்டுகளில் பாகிஸ்தான் ராணுவ தளவாட தொழிற்சாலையின் முத்திரைகள் இருந்தன. இதன்மூலம் பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகளை தூண்டி விட்டு தாக்குதலுக்கு திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது.

இதற்கிடையே எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாதிகள் பெரிய அளவில் நகர்ந்திருப்பது இந்திய செயற்கை கோள் படங்கள் மூலம் உறுதியானது. இதைத்தொடர்ந்து தான் காஷ்மீருக்குள் கூடுதலாக 38 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதக் குவியல் கண்டுபிடிக்கப்பட்டதால் மிகப்பெரிய நாச வேலை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது ஆகிய இரு பயங்கரவாத இயக்கங்களும் காஷ்மீரில் சில பகுதிகளுக்குள் ஊடுருவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட கூடும் என்று நேற்று உளவுத்துறை எச்சரித்தது.


இதையடுத்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரை நிறைவு பெற இருவாரங்கள் இருக்கும் நிலையில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக அதை முன்கூட்டியே முடித்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அமர்நாத் யாத்திரை மேற்கொள்ள காஷ்மீருக்கு வந்திருக்கும் பக்தர்கள் அனைவரும் உடனடியாக காஷ்மீரில் இருந்து வெளியேறும்படி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்களில் ஏராளமானோர் காஷ்மீரில் சுற்றி பார்க்க தங்கியுள்ளனர். அவர்களையும் வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளனர்.

காஷ்மீரில் சுமார் 5 ஆயிரம் வெளிநாட்டு பயணிகள் இருக்கிறார்கள். சுற்றுலா வந்துள்ள அவர்களையும் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேறும்படி அறிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அமர்நாத் யாத்திரை பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் காஷ்மீரில் இருந்து வெளியேற தொடங்கி உள்ளனர்.

காஷ்மீரில் இருந்து திடீரென அமர்நாத் யாத்திரை பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெளியேற உத்தரவிடப்பட்டிருப்பதால் உள்ளூர் மக்களிடம் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காஷ்மீருக்கு சலுகை அளிக்கும் சட்டப்பிரிவுகளை மத்திய அரசு ரத்து செய்யக்கூடும் என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வன்முறை ஏற்படலாம் என்ற பயத்தில் அத்தியாவசிய பொருட்களை அதிகளவு வாங்கி கையிருப்பு வைத்து வருகிறார்கள்.

காஷ்மீரில் முக்கிய பகுதிகளில் உள்ள ராணுவ நிலைகள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுதவிர பாதுகாப்பு படையினரின் ரோந்து பணியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது காஷ்மீரில் பதட்டத்தை அதிகரிக்க செய்துள்ளது.

காஷ்மீரில் ஏற்பட்டுள்ள பீதியை தொடர்ந்து நேற்று காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக்கை பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினார்கள். மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா நீண்ட நேரம் கவர்னருடன் பேசினார். காஷ்மீரில் ஏற்பட்டுள்ள பதட்டம் தேவையின்றி உருவாக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

இதைத்தொடர்ந்து கவர்னர் சத்ய பால் மாலிக் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “ காஷ்மீர் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் அமைதி காக்க வேண்டும். தங்களது கட்சி தொண்டர்களையும் அமைதியாக இருக்க அறிவுறுத்த வேண்டும். பாதுகாப்பு படை அதிகரிப்பு தொடர்பாக கூறப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று கூறி உள்ளார்.

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனம் ஸ்ரீநகருக்கான அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளது. ஆகஸ்டு 15-ந் தேதி வரை காஷ்மீருக்கு விமானங்கள் இயக்கப்படாது என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது. அது போல சில தனியார் விமான நிறுவனங்களும் விமான சேவையை ரத்து செய்துள்ளன. இதன் காரணமாக விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் காஷ்மீரில் இருந்து அமர்நாத் யாத்திரை பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் விரைவாக வெளியேற முடியாமல் தவிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.  இதைத் தொடர்ந்து காஷ்மீருக்கு விமான சேவையை இயக்க தயாராக இருக்கும்படி அனைத்து விமான நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News