செய்திகள்
பாராளுமன்றம்

மாநிலங்களவையிலும் தேசிய மருத்துவ கமிஷன் மசோதா நிறைவேறியது - அ.தி.மு.க. வெளிநடப்பு

Published On 2019-08-01 21:23 GMT   |   Update On 2019-08-01 21:23 GMT
தேசிய மருத்துவ கமிஷன் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுடெல்லி:

63 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ கமிஷன் அமைக்க வகை செய்யும் மசோதா ஒன்றை மத்திய அரசு உருவாக்கியது. ‘தேசிய மருத்துவ கமிஷன் மசோதா’ எனப்படும் இந்த மசோதா, எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வை முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வாக (நெக்ஸ்ட்) தேசிய அளவில் நடத்தவும் வழிவகை செய்கிறது.

இந்த மசோதா மக்களவையில் கடந்த 29-ந்தேதி நிறைவேறியதை தொடர்ந்து, மாநிலங்களவையில் சுகாதாரத்துறை மந்திரி ஹர்சவர்தன் தாக்கல் செய்தார். இந்த மசோதா தொடர்பாக நாடாளுமன்றக்குழு வழங்கிய 56 பரிந்துரைகளில் 40-ஐ அரசு ஏற்றுக்கொண்டதாக கூறிய அவர், நாட்டின் மருத்துவத்துறையை மேம்படுத்த வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து உறுப்பினர்களின் விவாதம் தொடங்கியது. பின்னர் அவற்றுக்கு மந்திரி ஹர்சவர்தன் பதிலளித்தார். அதைத்தொடர்ந்து குரல் ஓட்டெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது. ஆனால் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக இந்த மசோதா மீதான விவாதத்தை காங்கிரஸ் உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் மசோதாவில் 3 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில் முதலாவதாக, கைவைத்தியத்தை சட்டப்பூர்வமாக்கும் என்பதால் மசோதாவின் 32-வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

அடுத்ததாக தேசிய மருத்துவ கமிஷனில் தற்போதைய உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் மாநிலங்களுக்கு எதிராக இருப்பதாக கூறிய அவர், தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே கமிஷனில் பிரதிநிதித்துவம் பெற முடியும் என குற்றம் சாட்டினார். எனவே மாநிலங்களின் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை 15 ஆக உயர்த்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக தனியார் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 50 சதவீதத்துக்கு பதிலாக 75 சதவீத இடங்களுக்கு கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் பிரிவை மாற்றி அமைக்க வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் அறிவுறுத்தினார். தற்போதைய நிலைப்படி மருத்துவக்கல்வி தனியார்மயமாகும் வாய்ப்பு இருப்பதாக அச்சம் தெரிவித்தார்.

தேசிய மருத்துவ கமிஷன் மசோதா இரு அவைகளிலும் நிறைவேறி இருப்பதை தொடர்ந்து விரைவில் ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று சட்டமாகும். இதன் மூலம் இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டு தேசிய மருத்துவ கமிஷன் அமைக்கப்படும். மேலும் ஏற்கனவே அரசு அறிவித்தபடி அடுத்த 3 ஆண்டுகளில் நெக்ஸ்ட் தேர்வும் நடைமுறைப்படுத்தப்படும்.

எனினும் இந்த மசோதா, மருத்துவத்துறையினர் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News