செய்திகள்
சபாநாயகர் விஸ்வேசுவர ஹெக்டே காகேரி

கர்நாடக சட்டசபையின்புதிய சபாநாயகராக விஸ்வேசுவர ஹெக்டே காகேரி தேர்வு

Published On 2019-07-31 07:15 GMT   |   Update On 2019-07-31 07:15 GMT
கர்நாடகா மாநில சட்டசபையின்புதிய சபாநாயகராக பாஜகவை சேர்ந்த விஸ்வேசுவர ஹெக்டே காகேரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு:

கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அக்கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்ததால், கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது.

இதையடுத்து ராஜினாமா செய்யாத எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உள்பட மொத்தம் 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்பின், பிரதான எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க. தானாகவே பெரும்பான்மை பலத்தை பெற்றது. அதனடிப்படையில் கவர்னரின் அழைப்பின்பேரில் எடியூரப்பா முதல்-மந்திரியாக கடந்த 26-ம் தேதி பதவி ஏற்றார். 

அதன்பிறகு 29-ம் தேதி கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, சபாநாயகராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 31-ம் தேதி நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனு 30-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதில் பா.ஜ.க. மேலிடத்தின் உத்தரவுப்படி முன்னாள் மந்திரியும், பா.ஜ.க. மூத்த எம்.எல்.ஏ.வுமான விஸ்வேசுவர ஹெக்டே காகேரி மனு தாக்கல் செய்தார்.

சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தாததால், விஸ்வேசுவர ஹெக்டே காகேரி போட்டியின்றி ஒருமனதாக இன்று தேர்வு செய்யப்பட்டார்.
Tags:    

Similar News