செய்திகள்
சுப்ரிம் கோர்ட்டு

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க வழக்கு 20-ந்தேதிக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு

Published On 2019-07-30 22:30 GMT   |   Update On 2019-07-30 22:33 GMT
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க வழக்கு விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதுகுறித்து சபாநாயகரிடம் புகார் செய்தும் அவர் நடவடிக்கை எடுக்காததால் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

இதேபோல டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேரும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத 4 எம்.எல்.ஏ.க்களை தவிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 பேரை தகுதிநீக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த வழக்கை கடந்த மே 9-ந்தேதி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

தி.மு.க. கொறடா சக்கரபாணி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்துசெய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. கொறடா சக்கரபாணி மற்றும் தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும் தி.மு.க. கொறடா சக்கரபாணி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபல் தன்னுடைய வாதத்தில், சபாநாயகர் இந்த விவகாரத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே கோர்ட்டே தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்றார்.

இதற்கு சபாநாயகர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, இதுபோன்ற கோரிக்கையை ஏற்கனவே கோர்ட்டு நிராகரித்து உள்ளது. மேலும் சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்ற மனு மீது தான் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது என்று கூறினார்.

இதற்கு கபில்சிபல் எதிர்ப்பு தெரிவிக்கவே, தீர்ப்பு விவரங்களை பரிசீலித்த நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் தி.மு.க. தரப்பில் தாக்கல் செய்த திருத்தப்பட்ட கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதா என்பதை தெளிவுபடுத்த இந்த வழக்கை ஏன் மீண்டும் ஐகோர்ட்டுக்கு அனுப்பக்கூடாது என்று கேள்வி எழுப்பினார்கள்.

அப்படியானால் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும். கடந்த ஆண்டு இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டால் விசாரிக்கப்பட்டபோதே இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது. அதன்பின்னர் 6 முறை வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது. நீதிபதி ஏ.கே.சிக்ரி ஓய்வுபெற்றதால் இந்த வழக்கு தடைபட்டுள்ளது என்றும் கபில்சிபல் சுட்டிக்காட்டினார்.

அதற்கு நீதிபதிகள், இந்த நிலையில் வழக்கு தடைபட்டால் சரியாக இருக்காது என்று கூறி வழக்கை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டிலேயே விசாரிப்பதாகவும் விசாரணையை ஆகஸ்டு 20-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News