செய்திகள்
மணிரத்னம்

மணிரத்னம் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டாரா? வைரல் பதிவுகளின் உண்மை பின்னணி

Published On 2019-07-30 06:49 GMT   |   Update On 2019-07-30 06:49 GMT
பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டாரா? வைரலாகும் பதிவுகளின் உண்மை பின்னணியை பார்ப்போம்.



இந்தியாவில் கும்பல் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதப்பட்ட கடிதத்தில் திரைப்பட இயக்குனர் மணிரத்னம் கையெழுத்திட மறுத்ததாக கூறும் பதிவுகளின் உண்மை பின்னணி வெளியாகியுள்ளது.

பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் மணிரத்னம் கையெழுத்திட மறுக்கவில்லை, அவ்வாறு வெளியாகியுள்ள தகவல்களில் துளியும் உண்மையில்லை என இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதுபற்றி அதிகம் கருத்துக் கூற முடியாது என்றும், கடிதத்தில் மணிரத்னத்தின் கையெழுத்து 100 சதவிகிதம் உண்மையானது என அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக செய்தி நிறுவனம் ஒன்று, “இயக்குனர் மணிரத்னம் கடிதத்தில் கையெழுத்திட்டதாக கூறும் தகவல்களில் உண்மையில்லை. மணிரத்னம் தனது புதிய படத்தின் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அவர் அதுபோன்ற கடிதத்தில் கையெழுத்திடவும் இல்லை, கையெழுத்திடுமாறு யாரும் அவரை அணுகவில்லை.” என மணிரத்னத்தின் குழுவினர் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டது.



இதைத் தொடர்ந்து நரேந்திர மோடிக்கு எழுதப்பட்ட கடிதத்தில் மணிரத்னம் கையெழுத்திட மறுத்துவிட்டதாக கூறும் பதிவுகள் ட்விட்டரில் வைரலாகியுள்ளது. இதுதவிர பல்வேறு செய்தி நிறுவனங்களும் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டுள்ளன. 

இந்நிலையில் வைரல் பதிவுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் சுஹாசினி மணிரத்னம் ட்விட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில் “தயவுசெய்து மணிரத்னம் சார்பாக பேசவோ, எழுதவோ செய்யாதீர்கள். தவறான விளக்கங்கள் மீது தள்ளியே இருங்கள்” என தெரிவித்திருக்கிறார்.

இதுதவிர மணிரத்னம் கையெழுத்திடவில்லை என கூறும் பதிவுகளில் உண்மையில்லை என்றும் சுஹாசினி மணிரத்னம் தெரிவித்தார். இதனால் பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் மணிரத்னம் கையெழுத்திட்டது உண்மையாகி இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் வரும் பதிவுகளை உண்மைத்தன்மை தெரியாமல் பகிர்ந்து கொள்ளாதீர்கள். போலி செய்திகளால் பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. பலர் இதன் மூலம் உயிரிழந்திருக்கின்றனர்.
Tags:    

Similar News