செய்திகள்
எடியூரப்பா

மேகதாதுவில் கண்டிப்பாக அணை கட்டப்படும்- எடியூரப்பா உறுதி

Published On 2019-07-30 02:16 GMT   |   Update On 2019-07-30 02:16 GMT
பெங்களூருவில் குடிநீர் பிரச்சினையை போக்க மேகதாதுவில் கண்டிப்பாக புதிய அணை கட்டப்படும் என்று கர்நாடக மேல்-சபையில் முதல்-மந்திரி எடியூரப்பா உறுதி அளித்தார்.
பெங்களூரு :

கர்நாடக மேல்-சபையில் நிதி மசோதாவை தாக்கல் செய்து ஒப்புதல் பெற்ற பிறகு முதல்-மந்திரி எடியூரப்பா வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். நீர்ப்பாசன திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக தெரிவித்த அவர் கிருஷ்ணா மேல்-அணை திட்டத்தை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடியிடம் நிதியுதவி கேட்பேன் என்று தெரிவித்தார்.

இந்த வேளையில் சபையின் உறுப்பினர் கிருஷ்ணா மற்றும் காவிரி நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றுவது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு எடியூரப்பா பதில் அளித்து பேசியதாவது:-

மராட்டியத்தில் பா.ஜனதா அரசு ஆட்சி செய்கிறது. இதனால் கிருஷ்ணா மேல்-அணை தொடர்பாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்யப்படும். பெங்களூருவில் குடிநீர் பிரச்சினையை போக்க மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது.



மத்திய அரசின் அனுமதியுடன் மேக தாதுவில் அணை கண்டிப்பாக கட்டப்படும். இதில் இருந்து பின்வாங்க மாட்டோம். இதற்காக நிதி ஒதுக்கப்படும். மேகதாது அணை மூலம் பெங்களூருவுக்கு குடிநீர் கொண்டு வரப்படும். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். ஏற்கனவே முந்தைய சித்தராமையா தலைமையிலான அரசும், குமாரசாமி தலைமையில் செயல்பட்ட காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அரசும் ரூ.5,912 கோடி மதிப்பீட்டில் மேகதாது அணை கட்ட தீவிர முயற்சி எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News