செய்திகள்
டிகே சிவக்குமார்

தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்களை எடியூரப்பா கைவிடக்கூடாது- டிகே சிவக்குமார்

Published On 2019-07-30 02:01 GMT   |   Update On 2019-07-30 02:01 GMT
தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை எடியூரப்பா கைவிடக்கூடாது என்று முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு :

பெங்களூரு விதானசவுதாவில் முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்று முதல் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது. காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் எடியூரப்பாவை காப்பாற்றி உள்ளனர். இருப்பினும் எடியூரப்பா சிறு மரியாதைக்காக கூட அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையாவது காப்பாற்ற வேண்டும்.

கூட்டணி அரசை கவிழ்க்க காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து மும்பைக்கு சென்றனர். தற்போது அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களை எடியூரப்பா கைவிட்டுவிட கூடாது. நன்றாக பார்த்து கொள்ள வேண்டும். உங்களை (எடியூரப்பா) நம்பி வந்தவர்களுக்கு நல்ல பதவிகளை வழங்க வேண்டும்.



17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரை பா.ஜனதாவினர் விமர்சனம் செய்கிறார்கள். இந்த செயல் மூலம் புதிய மந்திரி சபையில் 17 பேரும் சேர்ந்து அவர்கள் அளிக்கும் தொல்லையில் இருந்து எடியூரப்பா காப்பாற்றப்பட்டு உள்ளார். இதை எடியூரப்பா புரிந்து கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை விமர்சனம் செய்த எடியூரப்பா பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் தொடர்ந்து கூட்டணியில் இருப்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு செய்யும். கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியை பெற நான் கோரிக்கை வைக்கவில்லை. கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா சார்பில் ‘ஆபரேஷன் தாமரை‘ மூலம் எம்.எல்.ஏ.க்கள் இழுக்கப்படுவது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Tags:    

Similar News