செய்திகள்
தேவேகவுடா

கூட்டணி குறித்து காங்கிரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம்- தேவேகவுடா

Published On 2019-07-29 02:11 GMT   |   Update On 2019-07-29 02:11 GMT
கூட்டணி குறித்து காங்கிரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம். அக்கட்சியின் முடிவை பொறுத்து நாங்கள் அடுத்தக்கட்ட முடிவு எடுப்போம் என்று முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா கூறினார்.
பெங்களூரு :

முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கட்சி விரோத செயல்களில் ஈடுபட்ட 14 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளார். எனது அனுபவத்தில் சபாநாயகர் ரமேஷ்குமார் வழங்கிய தீர்ப்பு விசேஷமானது. ஏற்கனவே சபாநாயகரின் தீர்ப்பை எதிர்த்து 3 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

மீதமுள்ள 14 பேர் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. 2 சட்டசபை தொகுதிகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினோம். நிர்வாகிகள் தங்களின் மனதில் உள்ளதை கூறினர். மேலும் அவர்கள் நீங்கள் தேர்ந்தெடுத்த தலைவர்கள் துரோகம் செய்துவிட்டனர் என்று கூறி தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர்.

நிர்வாகிகளின் கோபம் சரியானதே. கட்சியில் எந்த பதவியையும் எதிர்பார்க்காமல் எனக்கு நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்கினர். நான் தவறு செய்திருந்தால் அதை திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறேன். கூட்டணி அரசில் மூன்றில் ஒரு பங்கு அதிகாரம் எங்கள் கட்சிக்கு வழங்கப்பட்டது. அதில் சிலருக்கு பதவி வழங்கினோம்.



யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, சட்டசபையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு சபாநாயகர் ரமேஷ்குமார் பதிலளித்தார். குமாரசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு அனுமதி பெற்று கொடுக்க சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். மாநில மக்களுக்கு தொந்தரவு ஏற்படக் கூடாது.

மும்பையில் உள்ள தலைவர்கள் (தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள்) நாளை (அதாவது இன்று) பெங்களூரு வருகிறார்கள். அவர்கள் என்னையும், குமாரசாமியையும் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. ஜெய்பால்ரெட்டி நான் பிரதமராக இருந்தபோது மந்திரியாக பணியாற்றினார். அவர் ஒரு நேர்மையான அரசியல்வாதி. அவர் மரணம் அடைந்த செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தான் என்னிடம் பேசி காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியை அமைத்தனர். இப்போது அவர்கள் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பதை பார்க்கலாம். கூட்டணி விஷயத்தில் காங்கிரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம். அக்கட்சியின் முடிவை பொறுத்து நாங்கள் அடுத்தக்கட்ட முடிவு எடுப்போம்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.
Tags:    

Similar News