செய்திகள்
எடியூரப்பா

கர்நாடக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - எடியூரப்பா முடிவு

Published On 2019-07-28 05:03 GMT   |   Update On 2019-07-28 05:03 GMT
சபாநாயகர் ரமேஷ்குமார் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எடியூரப்பா முடிவு செய்துள்ளார்.

பெங்களூர்:

கர்நாடகாவில் 14 மாதங்கள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - மத சார்பற்ற ஜனதா தளம் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று கவிழ்ந்தது. 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவால் ஆட்சியை பறிகொடுத்தது.

இதற்கிடையே காங்கிரஸ் சட்டபேரவை தலைவர் சித்தராமையா சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கொடுத்த புகாரில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிஹோனி, மகேஷ் குமட்டஹள்ளி, கர்நாடக பிரக்ஞா வந்தா, ஜனதா எம்.எல்.ஏ. ஆர்.சங்கர் ஆகியோர் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி இருந்தார்.

இதையடுத்து 3 எம்.எல். ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தர விட்டார். தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள், 15-வது கர்நாடக சட்ட பேரவையின் எஞ்சியுள்ள 3 ஆண்டுகள் 10 மாதங்களுக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அவையில் உறுப்பினராக முடியாது என்று உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் 13 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் ரமேஷ் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


13 அதிருப்தி எம்.எல்.ஏ.க் களும் மும்பையில் தங்கி இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

அதன்பிறகு சபாநாயகர் ரமேஷ்குமாரின் நடவடிக்கை யூகிக்க முடியாத நிலையில் இருப்பதால் அவர் பதவியை ராஜினாமா செய்யுமாறு பா.ஜனதா தகவல் அனுப்பி உள்ளது.

சட்டசபையில் ஆளும் கட்சியாக இருப்பவர் தான் சபாநாயகராக பதவி வகிப்பார் என்ற மரபை பின்பற்றுவதற்காக பதவி விலகுமாறு ரமேஷ்குமாரை அறிவுறுத்தியுள்ளது.

சபாநாயகர் ரமேஷ்குமார் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எடியூரப்பா முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தி உள்ளார்.

பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் கூறும்போது, ‘சபாநாயகர் ரமேஷ்குமார் தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்.

நாளை சட்டசபை கூடியதும் நிதி மசோதாவை நிறை வேற்றுவதும், நம்பிக்கை வாக்குறுதியை நடத்துவதும் தான் எங்கள் முதல் நோக்கம். அதன்பிறகு சபாநாயகர் ரமேஷ்குமார் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்’ என்றார்.

Tags:    

Similar News