செய்திகள்
கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார்

கர்நாடகா சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் - பாஜக கொண்டு வருகிறது

Published On 2019-07-27 10:13 GMT   |   Update On 2019-07-27 10:13 GMT
கர்நாடகா சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது.

பெங்களூர்:

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியை எதிர்த்து எம்.எல்.ஏ. பதவியை 15 பேர் ராஜினாமா செய்தார்கள். இதனால் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

இதையடுத்து அந்த 15 பேரையும் மீண்டும் தேர்தலில் நிற்க விடாமல் செய்வதற்காக அவர்கள் ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்கவில்லை. மேலும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யவும் அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ஏற்கனவே கடந்த வியாழக்கிழமை அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் 3 பேரை கட்சிதாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். மற்ற அதிருப்தி எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய ஆலோசித்து வருகிறார்.

இதையடுத்து சபாநாயகரை பதவியில் இருந்து காலி செய்ய பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் தீவிரமாகி உள்ளனர். திங்கட்கிழமை கர்நாடகா சட்டசபை கூடியதும் சபாநாயகர் ரமேஷ் குமார் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ்குமார் அடுத்தடுத்து முடிவுகள் எடுக்கும் முன்பு அவரை துரத்தும் வகையில் உடனடியாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக் கொள்ள வலியுறுத்த உள்ளனர். அவரை பதவியில் இருந்து இறக்கி விட்டு புதிய சபாநாயகரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதனால் சபாநாயகர் பதவியை பிடிப்பதற்கு பாரதிய ஜனதாவில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News