செய்திகள்
பிஆர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் பாராளுமன்றம் முன்பு முற்றுகை

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து டெல்லியில் இன்று 2-வது நாளாக போராட்டம்

Published On 2019-07-26 09:36 GMT   |   Update On 2019-07-26 09:36 GMT
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து டெல்லியில் இன்று 2-வது நாளாக பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
புதுடெல்லி:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சிகள், விவசாய அமைப்புகள், அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் 100 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவித்தனர். அதன் பிறகு நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம், தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் அதன் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பேரழிவினை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசு இத்திட்டத்தை உடனே கைவிடக்கோரியும் 300 விவசாயிகள் சென்னையில் இருந்து டெல்லி சென்றனர்.

டெல்லி பாராளுமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றுக் கொண்டிந்த நிலையில் அதன் அருகில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர். மாலை 5 மணி வரை இந்த போராட்டம் நடந்தது. முன்னதாக இந்த உண்ணாவிரதத்தை புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராமலிங்கம், சண்முகம், வில்சன், மதுரை கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. வெங்கடேசன் ஆகியோரும் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினர். இதன் முடிவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை தமிழக விவசாயிகள் பிரதமர் அலுவலகத்தில் மாலையில் அளித்தனர். இன்று 2-வது நாளாக தமிழக விவசாயிகள் டெல்லி பாராளுமன்றத்தை முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி பி.ஆர்.பாண்டியன் தலைமையில், இன்று காலை 11 மணியளவில் ஜந்தர்மந்தர் பகுதியில் இருந்து 300 விவசாயிகள் ஊர்வலமாக பாராளுமன்றத்தை நோக்கி புறப்பட்டு சென்றனர்.

இன்று பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருந்ததால் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த டெல்லி ஜந்தர்மந்தர் போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் பாராளுமன்றம் செல்லும் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் நடைபெறும் போராட்டம் குறித்து பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:-

டெல்லியில் எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உண்ணாவிரதம் நடத்தி அந்த தீர்மானத்தை பிரதமர் அலுவலகத்தில் வழங்கினோம். நேற்று எங்களை புதுச்சேரி முதல்வர், தி.மு.க., கம்யூனிஸ்டு எம்.பி.க்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். நேற்று எங்கள் கோரிக்கை குறித்து பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதாக தி.மு.க. எம்.பி.க்கள் கூறியிருந்தனர்.

ஆனால் முத்தலாக் சட்ட மசோதா தொடர்பான விவாதத்தால் எங்கள் பிரச்சினை எடுத்துக்கொள்ளப்படவில்லை. நாங்கள் எங்கள் போராட்டத்தை அமைதியான முறையில் நடத்துகிறோம்.

மத்திய அரசின் கவனத்தை எங்கள் போராட்டம் ஈர்க்கும் என்று நினைக்கிறோம். நாங்கள் பிரதமர் அலுவலகத்தில் வழங்கியுள்ள தீர்மானம் பிரதமரை சென்று அடையும். அடுத்தகட்ட போராட்டம் குறித்து தமிழகம் திரும்பியதும் முடிவு செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News