செய்திகள்
எடியூரப்பா

15 அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரம்- எடியூரப்பா பதவி ஏற்பதில் சிக்கல்

Published On 2019-07-25 06:32 GMT   |   Update On 2019-07-25 06:32 GMT
சபாநாயகரின் முடிவு, சுப்ரீம் கோர்ட்டின் முடிவு, உள்கட்சியில் உள்ள பிரச்சனைக்கு சுமூக தீர்வு என 3 விவகாரங்களை மையமாக வைத்து தான் அடுத்து ஆட்சி அமைக்க வேண்டிய நிலை இருக்கிறது. எனவே எடியூரப்பா அரசு உடனடியாக பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
பெங்களூரு:

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதசார் பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசு நேற்று முன்தினம் நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்தது. இதையடுத்து குமாரசாமி தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அதிக எம்.எல்.ஏ.க்கள் கொண்டு தனிப்பெரும் கட்சியாக உள்ள பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது.

கர்நாடக சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 224. பாரதிய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அந்த கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் பாரதிய ஜனதா கூட்டணி எண்ணிக்கை 107 ஆக உள்ளது.

மொத்தம் உள்ள 224 எம்.எல்.ஏ.க்களை வைத்து பார்த்தால் மெஜாரிட்டிக்கு 113 எம்.எல்.ஏ.க்கள் தேவை. அதைவிட 6 எம்.எல்.ஏ.க்கள் குறைவாகவே உள்ளனர். எனவே உடனடியாக ஆட்சி அமைப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன.

காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவான நிலை எடுத்து தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால் இந்த ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் ஏற்கவில்லை.

15 எம்.எல்.ஏ.க்களும் பாரதிய ஜனதாவினர் பாதுகாப்பில் மும்பையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேரில் வந்து இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்டார்.

ஆனால் அவர்கள் தங்கள் வக்கீல்களை சபாநாயகரிடம் அனுப்பி விளக்கம் கொடுத்தனர். நேரில் வந்து ஆஜராகவில்லை. நேரில் ஆஜராக 4 வாரம் அவகாசம் கேட்டனர். மேலும் இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டிலும் அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதனால் 15 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் விவகாரத்தில் சபாநாயகர் முடிவு எடுப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. அவர்கள் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டால் சட்டசபையின் பலம் 209 ஆக இருக்கும்.

அப்போது மெஜாரிட்டிக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படும். அந்த வகையில் பார்த்தால் பாரதிய ஜனதாவுக்கு மெஜாரிட்டி உள்ளது. ராஜினாமாவை ஏற்காத பட்சத்தில் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 224 ஆக இருப்பதால் பாரதிய ஜனதாவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது.

எனவே எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் முடிவு எடுத்த பிறகு தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உள்ளது.

மேலும் 15 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சி தாவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வி‌ஷயத்திலும் சபாநாயகர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று தெரியவில்லை.

ஒன்று சபாநாயகர் 15 பேரின் ராஜினாமாவை ஏற்க வேண்டும். இல்லை என்றால் ஏற்க முடியாது என்று அறிவிக்க வேண்டும். அத்துடன் தகுதி நீக்கம் விவகாரத்திலும் அவர் முடிவு எடுக்க வேண்டும்.

இதில் சபாநாயகர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதை பொறுத்தே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை பாரதிய ஜனதாவுக்கு உள்ளது.


இதுமட்டுமல்லாமல் கொறடா உத்தரவு சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் குமாரசாமி, சித்தராமையா இருவரும் தனியாக மனுதாக்கல் செய்துள்ளனர். அந்த வழக்கிலும் சுப்ரீம் கோர்ட்டு முடிவு சொல்ல வேண்டியது உள்ளது.

ஏற்கனவே அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் இதுபற்றி வழக்கு தொடர்ந்து உள்ளனர். அந்த வி‌ஷயத்திலும் சுப்ரீம் கோர்ட்டு தனது முடிவை சொல்ல வேண்டும்.

எனவே சுப்ரீம் கோர்ட்டு முடிவு, சபாநாயகரின் முடிவு ஆகியவை எப்படி இருக்கும் என்பதை பொறுத்து தான் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும்.

நேற்று முன்தினம் ஆட்சி கவிழ்ந்ததுமே நேற்றே பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்தி கட்சியின் சட்டமன்ற தலைவரை (முதல்-மந்திரி) தேர்வு செய்ய திட்டமிட்டனர். கூட்டத்தில் எடியூரப்பா சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்காக அனைத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும் தயாராக இருந்தனர். ஆனால் நேற்று கூட்டம் நடைபெறவில்லை.

இந்த வி‌ஷயத்தை பாரதிய ஜனதா மேலிடம் சற்று பொறுமையாக கையாள திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கட்சி தலைவர் அமித்ஷா நேற்று இது சம்பந்தமாக செயல் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆனால் இதில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.

பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை கட்சியின் முக்கிய முடிவுகளை அதன் பாராளுமன்ற குழு கூடி முடிவு செய்யும். அதன்படி பாரதிய ஜனதா பாராளுமன்ற குழு கூட்டம் இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பிறகு 2 மேலிட பார்வையாளர்கள் கர்நாடகாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்கள் முன்னிலையில் கட்சி சட்டமன்ற தலைவர் தேர்வு செய்யப்படுவார்.

அதற்கு முன்னதாக ஆட்சி அமைக்கும்போது, எந்த பிரச்சனையும் வராமல் ஆட்சி நீடிப்பதற்கான உத்தரவாதத்தை பெற வேண்டும் என்று கட்சி மேலிடம் விரும்புகிறது.

முதல்கட்டமாக காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து வந்துள்ள 15 எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது உள்ளது.

ஆட்சி கவிழ்ந்து புதிய முதல்-மந்திரி பதவி ஏற்பதற்கு முன்பாகவே அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பாரதிய ஜனதா தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 15 பேருக்கும் மீண்டும் டிக்கெட் வழங்க வேண்டும், அதில் வெற்றி பெற்றால் அவர்களுக்கு கண்டிப்பாக மந்திரி பதவி வழங்க வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கையாகும். இதற்கான உத்தரவாதத்தை கட்சி மேலிடம் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் அவர்கள் அனைவருக்கும் மந்திரி பதவி வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. ஏனென்றால் பல பகுதிகளில் ஏற்கனவே பாரதிய ஜனதாவில் பலம் வாய்ந்த தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மந்திரி பதவி கொடுத்தாக வேண்டும்.

மொத்த எம்.எல்.ஏ.க்களில் 15 சதவீதம் என்ற அடிப்படையில் 34 பேருக்கு தான் மந்திரி பதவி வழங்க முடியும். பலரும் மந்திரி பதவிக்கு ஆசைப்படும்போது அதை நிறைவேற்றுவது கடினம்.

15 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கும் மந்திரி பதவி வழங்குவதாக இருந்தால் பா.ஜ.க. முக்கிய நபர்கள் பலருக்கு மந்திரி பதவி வழங்க முடியாத நிலை உள்ளது. எனவே பாரதிய ஜனதாவிலும் அதிருப்தி ஏற்படும் என்று மேலிடம் கருதுகிறது.

இதனால் அதில் ஒரு இறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்று மேலிடம் நினைக்கிறது.

கர்நாடகாவில் லிங்காயத், ஒக்காலிகா ஆகிய சமூகத்தினர் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மந்திரி பதவி கொடுப்பதிலும் பல சிக்கல்கள் இருக்கின்றன. அதிலும் தீர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. சபாநாயகரின் முடிவு, சுப்ரீம் கோர்ட்டின் முடிவு, உள்கட்சியில் உள்ள பிரச்சனைக்கு சுமூக தீர்வு என 3 விவகாரங்கள் கட்சியின் முன் நிற்கின்றன.

இதை மையமாக வைத்து தான் அடுத்து ஆட்சி அமைக்க வேண்டிய நிலை இருக்கிறது. எனவே எடியூரப்பா அரசு உடனடியாக பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

ஆட்சி அமைப்பது தொடர்பாக கட்சி மேலிடம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கர்நாடக பாரதிய ஜனதா விரும்புகிறது. இதற்காக கர்நாடக மூத்த தலைவர் ஜெகதீஷ் ‌ஷட்டர், பசவராஜ் பொம்மை, மாதுசாமி, அருணஜிந்தாவலி ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.

அவர்கள் கட்சி தலைவர் அமித்ஷாவை இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

அதேபோல அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேரின் கோரிக்கைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது சம்பந்தமாக நேரடியாக ஆலோசிப்பதற்காக மூத்த தலைவர் அசோகா மும்பை சென்றுள்ளார்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேரும் இந்த பிரச்சனைக்கு இறுதி தீர்வு வந்ததற்கு பிறகே பெங்களூரு திரும்ப திட்டமிட்டு இருக்கிறார்கள்.

கட்சி மேலிடம் இதில் இறுதி முடிவு எடுத்ததற்கு பிறகு எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு எடியூரப்பா தலைவராக தேர்வு செய்யப்படுவார். அதன்பின் அவர் ஆட்சி அமைக்க கவர்னரிடம் முறைப்படி உரிமை கோருவார்.

தற்போதைய சூழ்நிலையில் கூட்டம் நடப்பதற்கு இன்னும் சில நாட்கள் காலதாமதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்த வாரம்தான் எடியூரப்பா பதவி ஏற்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சபாநாயகர் ரமேஷ்குமார் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை பொறுத்தே கர்நாடக அரசியலில் அடுத்த நடவடிக்கைகள் அமையும்.
Tags:    

Similar News