செய்திகள்
யானை

மின்சாரம் தாக்கி குட்டி இறந்ததால் டிரான்ஸ்பார்மரை கீழே சாய்த்து சேதப்படுத்திய தாய் யானை

Published On 2019-07-23 16:09 GMT   |   Update On 2019-07-23 16:09 GMT
குட்டியின் மரணத்துக்கு காரணமாக இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரை தாய் யானை கீழே சாய்த்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:

பலமநேர் மண்டலம் கோப்பில்லாகொத்தூர் கிராமத்தில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. அதன் அருகில் 20-ந் தேதி இரவு காட்டு யானைகள் கூட்டம் வந்தது.

மறுநாள் காலை பார்த்தபோது, அங்கு குட்டி ஆண் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இறந்து கிடந்த குட்டியானையின் அருகிலேயே தாய் யானை உள்பட ஏராளமான யானைகள் சோகத்துடன் நின்றிருந்தன.

கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்து, குட்டி யானையின் உடலை அங்கேயே குழித்தோண்டி புதைத்தனர். ஆனால் குட்டி மீது அதிக பாசம் கொண்ட தாய் யானை, குட்டியின் மரணத்துக்கு காரணமாக இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரை கீழே சாய்த்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி மதன்மோகன் கூறியதாவது:-

அனைத்து வன உயிரினங்களிலும் யானைக்கு கோபம் அதிகமாக வரும் அத்துடன் தாய்ப்பாசமும் அதிகமாக காணப்படும். அதைத் தான் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். தன்னுடைய குட்டி டிரான்ஸ்பார்மரால் இறந்ததை அறிந்த யானை ஆத்திரத்துடன் இருந்துள்ளது.

டிரான்ஸ்பார்மரை கீழே சாய்த்து சேதப்படுத்தி தாய் யானை தனது கோபத்தை தணித்துக் கொண்டது. ஆகையால் குட்டி யானை இறந்த இடத்துக்கு மீண்டும் தாய் யானை உள்பட ஏராளமான யானைகள் வரும் எனக்கருதி நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரத்தை துண்டித்து விட்டோம். அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஒரு வாரத்துக்கு மின்சாரம் இருக்காது.

அந்த மக்களை வேறொரு பகுதிக்கு சென்று தங்கியிருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளோம். வயல்வெளி பகுதியில் தங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளோம். தாய் யானை ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறை சார்பில் பலத்த பாதூகப்பு ஏற்பாடுகளை செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News