செய்திகள்
ராகுல் காந்தி

காஷ்மீர் விவகாரம்: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் - ராகுல் காந்தி

Published On 2019-07-23 10:27 GMT   |   Update On 2019-07-23 10:27 GMT
காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கருத்து தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
புதுடெல்லி:

காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அப்படி எந்த கோரிக்கையையும் டிரம்பிடம் பிரதமர் மோடி வைக்கவில்லை என இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் பதில் அளிக்க வலியுறுத்தி முழக்கமிட்டதால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. 



இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கருத்து தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பேச்சில் டிரம்பை தலையிட மோடி கேட்டுக்கொண்டதாக டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் பலவீனமான வெளியுறவுத்துறை இதனை இல்லை என மறுக்கிறது.

இது உண்மையாக இருக்குமானால் 1972 சிம்லா ஒப்பந்தப்படி மோடி நடக்கவில்லை. மேலும், அவர் மக்களை ஏமாற்றியுள்ளார். டிரம்ப் உடன் நடந்த சந்திப்பில் மோடி பேசியது என்ன என்பது குறித்து நாட்டு மக்களுக்கு மோடி விளக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News